சனி, 26 மே, 2018

கொற்கை வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்



கொற்கை வெற்றிவேல் அம்மனும்
வெற்றிவேல் செழியனும்
தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கின்றபோது நாட்டுப்புறம் சார்ந்த கதை, பாடல், வழிபாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராயின் பல புதிய தகவல்களையும், வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களையும் பெறக்கூடியதாய் உள்ளது. அவ்வகையில் பழந்தமிழரின் தலைநகராய் விளங்கிய கொற்கையில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற வெற்றிவேல் அம்மன் வழிபாடும் வழிபாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் இலக்கியச் சான்றுகளும் வாய்மொழிச் செய்திகளும் தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யத் தூண்டுவனவாய் அமைந்துள்ளன.
கொற்கை வெற்றிவேல் அம்மன்
          பழம்பாண்டியர்களின் தலைநகராகவும் சங்க இலக்கியத்தில் தம் பெருமையை பதித்துக்கொண்ட கடற்கரைத் துறைமுகமாகவும் இலங்கியது கொற்கை நகரம்.
          “முத்துக்களும் பலவகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப் பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் (மதுரைக்காஞ்சி. 312 – 323) மதுவகைகளும் கண்ணாடிச் சாமான்களும் (புறம். 56:18) கொற்கைப் பெருந்துறைக்கு வந்திறங்கின”1 என்பதால் கொற்கையின் சிறப்பினை அறிய முடிகின்றது.
          தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் கொற்கை அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் கிழக்கிலும் உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
          “கொற்கையை மதுரோதயநல்லூர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன”2
          பொற்கை என்று கொற்கைச் செப்பேட்டுப் பிரதியில் இடம்பெற்றுள்ளது. கடைச்சங்க காலத்தில் விளங்கிய பாண்டிய மன்னர்களுள் ஒருவர் பொற்கைப் பாண்டியன். கண்ணகி முன் தோன்றிய மதுராபுரித் தெய்வம் பாண்டியர்களின் செங்கோல் பெருமையைக் கூறும்போது பொற்கைப் பாண்டியன் பெருமையை (சிலம்பு 23: 49-53) எடுத்துரைத்துள்ளது.
          கி.பி. 130 வரை கொற்கை, பாண்டியரின் தலைநகராக இருந்த செய்தியை தாலமி என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். கொற்கை தலைநகராக இருந்தபோது அதனை ஆட்சி செலுத்தியப் பொற்கைப் பாண்டியனின் செங்கோல் திறத்தைப் பாராட்டுமுகமாக தலைநகர் ‘பொற்கை’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கொள்ளலாம். இன்றும் ஊர் விழாக்களில் பொற்கை என்றே கொற்கை குறிக்கப்படுவதைக் காணக் கூடியதாய் உள்ளது.
          பண்டைத் தமிழகத்தின் தலைநகராக விளங்கிய கொற்கையில் குளத்தின் நடுவில் அமைந்துள்ளதே ‘வெற்றிவேல் அம்மன்’ கோவில். நாட்டுப்புற தெய்வமாக விளங்கும் இவ் வெற்றிவேல் அம்மன், வரலாற்று மீட்டுருவாக்கத்தில் பெறுகின்ற இடத்தை ஆய்வதே இக்கட்டுரை.
வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்
          மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தீர்ப்பால் உயிர் மாய்கிறான். கண்ணகியும் உயிர் துறக்க, பத்தினித் தெங்வத்திற்கு வழிபாடு நிகழ்த்த எண்ணிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயம் சென்று, கல்லெடுத்து கனகவிசயர் தலைமேல் ஏற்றிக்கொண்டு மீள்கிறான். வழியில் கங்கையின் தென்கரையில், குமரித்துறை படிந்து கங்கை ஆடச் சென்ற மாடலமறையோனைச் சந்திக்கின்றான். அவன் கொற்கைக்கோமான் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த செய்தியைக் கூறுகிறான்.
            “கொற்கையில் இரந்த வெற்றிவேற் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைந் நூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி”3
இவ்விலக்கியச் சான்றால் கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த பிறகே செங்குட்டுவன் வஞ்சியில் கண்ணகிக்குச் சிலை வடித்து விழா எடுத்தான் என்பது பெறப்படுகிறது.
          கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்தப் பின்னர்தான் மதுரைக்குச் சென்று அரசாட்சியை ஏற்றார் என்பதும்
            “ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்மதைக் காக்கும் முறைமுதற் கட்டிலின்
நிறைமணிப் புரவி ஓர் ஏழ்பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினான் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினான்”4         
என்ற சிலப்பதிகாரத் தொடர்களால் அறியப்படுகிறது.
கொற்கையில் வெற்றிவேல் செழியனால் விழா எடுக்கப்பட்ட கண்ணகி வழிபாடே வெற்றிவேல் அம்மன் வழிபாடாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இன்றும் கொற்கை மாநகரில் நடைபெற்று வருகிறது. இடப்புறத்தில் தலையைச் சாய்த்திருக்கும் அம்மனின் சிலைக்கு ஊர்மக்கள் கூறுகின்ற காரணமும் வழிவழியாக கண்ணகி வழிபாடு கொற்கையில் இருந்து வந்த வரலாற்றுச் சுவட்டைக் காட்டுவதாகவே உள்ளது. ஆயிரம் பொற்கொல்லர்களை அழைத்து வந்து வெற்றிவேற் செழியன் ஒரு மாலை பொழுதிலே உயிர்ப்பலி ஊட்டி சாந்தி செய்தபோது அது கண்ட கண்ணகி தாங்க மாட்டாது தலை அசைத்தாள்5 என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இன்றும் தலை சாய்ந்த நிலையிலேதான் அம்மனின் சிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியனால் கொற்கையில் விழா எடுத்து வழிபாடு செய்யப்பட்ட கண்ணகியின் வழிபாடு, கண்ணகி வழிபாட்டை நடத்திய வெற்றிவேல் செழியனின் பெயரால் வெற்றிவேல் அம்மன் என்றும், செழிய நங்கை என்றும் அழைக்கப்பட்டு மக்களால் தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
முடிபு
‘கண்ணகிக்குக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான் சேரன்’  என்று சேரனுக்கு அளிக்கப்பெற்ற முதன்மை நிலை, பாண்டியனுக்கு அளிக்கப்படாமையை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு கொற்கை ‘வெற்றிவேல் அம்மன்’ என்ற நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு வாய்ப்பளிக்கிறது.
வெற்றிவேற் செழியனால் வழிபாடு செய்யப்பெற்றதால் கண்ணகி வழிபாடு, மன்னனின் பெயரால் இன்று வெற்றிவேல் அம்மனாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இருக்கின்ற காரணம் பற்றி அதன் வரலாற்றுப் பின்னணி மறைக்கப்படாமல் மீட்டுருவாக்கம் செய்யப்படுதல் அவசியமாகிறது.
வாய்மொழியாக வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற மக்களின் இலக்கியங்களே வரலாற்று ஆதாரங்களாகவும் இலங்குகின்றன. எழுத்து இலக்கியங்களுக்கு உள்ள வன்மை வாய்மொழி இலக்கியங்களுக்கு இல்லாதிருக்கலாம்; மாற்றம் பெறக்கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்கலாம். ஆனால் இவை புராணக் கதைகள் அல்ல; வரலாற்றுச் செய்திகளையும், இலக்கியச் சான்றுகளையும் தன்னுள் அடக்கிய பெட்டகங்கள். இவற்றையும் சான்றாதாரங்களாகக் கொண்டு ஆராய்கின்றபோது நிச்சயம் வரலாறுகள் திருத்தப்படலாம்.
அடிக்குறிப்பு
1.               சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, ப. 160.
2.   சோமலே, திருநெல்வேலி மாவட்டம், ப. 254.
3.   சிலப்பதிகாரம், 27வது காதை 127 – 130 வரிகள்.
4.   சிலப்பதிகாரம் 27வது காதை 130 – 138 வரிகள்.
5.   அருணாச்சலம் பிள்ளை, தகவலாளி, கொற்கை.






ஞாயிறு, 15 ஏப்ரல், 2018


புறநானூறு - 188 வது பாடல்.

பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பி                              

துறை – பொருண்மொழிக்காஞ்சி (உயிருக்கு நன்மை செய்கின்ற உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்)
        காதலும் வீரமும் மட்டுமே சங்கப்பாடல்களின் பாடுபொருள் என்று சொல்லிவிடமுடியாது. கவிஞனும் சரி, காவலனும் சரி, வாழ்க்கையை அனுபவித்துப் பாடினார்கள்; அறத்தோடு வாழ்வதற்கான அறவுரைகளைப் பகர்ந்தார்கள். இனி, பாடலுக்கு வருவோம்.
ஒரு சின்னக்குழந்தை செய்கின்ற குறும்புகள் அனைத்தையும் ஒரு  ஏழு அடிக்குள் பாடலாகத் தர முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் நம்மவர்களின் பதிலாக இருக்கும். ஆனால், முடியுமென்கிறார் பாண்டியன் அறிவுடைநம்பி!
குழந்தை குறுகுறுவென்று நடக்கிறதாம்; உணவு உண்ணுகின்ற வேளையிலே இடையிலே வந்து சின்னக்கையை நீட்டுகிறதாம், நெய்போட்டுப் பிசைந்த சோற்றைத் தரையில் கொட்டுகிறதாம். பின் அதனைத் தொடுகிறதாம், சோற்றை வாயில் கவ்வுகிறதாம், கையால் பிசைகிறதாம், சோற்றை உடம்பெங்கும் சிதறுகிறதாம், இத்தனை செயல்களையும் செய்து மயக்குகின்ற குழந்தை என்கிறார் மன்னர். குழந்தை மட்டுமல்ல மயக்கத்தைத் தந்தது, மன்னரின் பாடலும்தான்!

படைப்பு பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்
பயக்குற இல்லை தாம் வாழும் நாளே.


கருத்துரை:  
பலவகையான செல்வங்களையும் உண்டாக்கி, பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றிருப்பவராக இருந்தாலும் உணவு உண்ணும்போது இடையே குறுகுறுவென்று நடந்து வந்து தன் சிறு கையினை நீட்டி நெய்யுடைச் சோற்றை வாங்கி அச்சோற்றைத் தரையில் இட்டும் பின் அதனைத் தொட்டும் வாயால் கவ்வியும் கையால் பிசைந்தும் உடம்பில் சிதறியும் செயல்களால்  மயக்குகின்ற குழந்தைகள் இல்லாதவர்களுக்கு அவர்கள் வாழுகின்ற நாட்கள் பயனற்றதாகும்.

சொற்பொருள் விளக்கம்: படைப்பு பல படைத்து - செல்வங்கள் பலவற்றையும் உருவாக்கி, பலரோடு உண்ணும் - பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற, உடைப்பெருஞ்செல்வர் ஆயினும் - உடைமையாகப் பெருஞ்செல்வத்தைப் பெற்றவராக இருந்தாலும், இடைப்பட குறுகுறு நடந்து - உணவு உண்ணுகின்றபோது இடையிலே குறுகுறுவென்று நடந்து வந்து, சிறு கை நீட்டி – சின்னக் கைகளை நீட்டி, இட்டும் - சோற்றில் கைகளை இட்டும், தொட்டும் – பின் சோற்றை தொட்டு எடுத்தும், கவ்வியும் – வாயால் சோற்றைக் கவ்வியும், துழந்தும் – கையால் சோற்றினைப் பிசைந்தும், நெய்யுடை அடிசில் – நெய் இடப்பட்ட உணவினை, மெய்பட விதிர்த்தும் – உடம்பில் சிதறியும், மயக்குறு மக்களை – செயல்களால் மயக்குகின்ற குழந்தைகளை, இல்லோர்க்கு- இல்லாதவர்களுக்கு, பயக்குறை இல்லை - பயன்தரத்தக்க பொருள் இல்லை, தாம் வாழும் நாளே – அவர்கள் வாழுகின்ற நாளில்.
கண்முன்னே  குழந்தையின் அத்துணை குறும்புகளையும் காண்பதுபோல், பாடலிலே படம்பிடித்துக் காட்டிய பாண்டியனின் எழுத்தாற்றலுக்கு முன்னால் - வாழ்க்கையை அனுபவிக்கின்ற பண்புக்கு முன்னால் எதுவும் ஈடாக முடியுமா?


செவ்வாய், 25 ஜூலை, 2017

புறநானூறு-218

வடக்கிருந்து உயிர் துறக்க நினைத்த கோப்பெருஞ்சோழன்,  தான் இதுவரை பார்த்தே  இராத தன் நண்பர், புலவர் பிசிராந்தையாருக்கும் தன்னுடைய பக்கத்திலே இடம் போடச் சொல்கின்றார்; தான் இறக்கும் தருவாயில் அவனும் வந்துவிடுவான் என்கின்றார்; அவர் சொன்னதுபோலவே, பிசிராந்தையாரும் வருகின்றார். தன் நண்பர் கோப்பெருஞ்சோழனுடனே உயிர் துறக்கின்றார். அதைப் பார்த்த புலவர் கண்ணகனார் வியந்து போகின்றார். பார்த்தே இராத , வேற்று நாட்டு புலவன்மேல் மன்னன் கொண்ட நட்பும், அந்த நட்புக்கு உரியவனாய் புலவன் இருந்ததையும் பார்த்து “சான்றோர் என்றுமே சான்றோர் பக்கமே சார்ந்து இருப்பர்” என்கின்றார். இதோ அந்தப் புறநானூற்றுப் பாடல்.
           பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
           மா, மலை பயந்த காமரு மணியும்,
            இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
            அரு விலை நன் கலம் அமைக்கும் காலை,
            ஒரு வழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்            
            சான்றோர் பாலர் ஆப;
            சாலார் சாலார் பாலர் ஆகுபவே.(புறநானூறு.218)
தெளிவுரை                           
பொன், பவளம், முத்து, மற்றும் நிலைபெற்ற பெரிய மலையானது தந்ததாகிய விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை கிடைக்கின்ற இடங்கள் ஒன்றற்கொன்று தொலைவாக இருப்பினும், அரிய மதிப்புடைய நல்ல அணிகலன்களில் அவற்றைச் சேர்த்து வடிவமைக்கும்போது அவை ஒரே இடத்தில்  இணைந்திருக்கின்றன. அதுபோல, சான்றோர்கள் என்றும் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய சான்றாண்மை இல்லாதார் சான்றோர் அல்லாதவர்களோடே இணைந்திருப்பர்.
சொற்பொருள் விளக்கம்
 பொன்னும்- தங்கமும், துகிர்- பவளம், முத்து- முத்து, மன்னிய- நிலைபெற்ற, மாமலை- பெரிய மலை,பயந்த – தந்த, காமரு மணியும்- விரும்பத்தக்க மணியும்,இடைபட- இடையிலுள்ள, சேய-தொலைவு, ஆயினும்-ஆனாலும், தொடை –  கட்டுதல்,புணர்ந்து- இணைத்து,அரு விலை – பெரும் மதிப்புடைய, நன் கலம் – நல்ல அணிகலன்கள், அமைக்கும் காலை- அமைக்கின்றபோது,ஒரு வழித் தோன்றியாங்கு – ஒன்றாகத் தோன்றுவதுபோல, என்றும் சான்றோர்- என்றைக்குமே சான்றோர், சான்றோர் பாலர் ஆப– சான்றோர் பக்கமிருப்பர்,சாலார் –சால்பு இல்லாதவர், சாலார் பாலர் ஆகுபவே-சால்பு இல்லாதவர் பக்கமே இணைந்திருப்பர்.
மண்ணிலே கிடைத்தால் என்ன?, மலையிலே கிடைத்தால் என்ன?,  கடலிலே கிடைத்தால் என்ன? எங்கே கிடைத்தாலும் அவை ஒன்றொடொன்று இணைந்து அழகிய அணிகலன்களாகின்றன. அப்படித்தான், இங்கே நாடாளும் காவலனாக இருந்தால் என்ன?  பாவலனாக இருந்தால் என்ன? உயர்ந்த குணவியல்புக்கு முன்னர்,  அனைவரும் ஒன்றுதான்; நான் பெரியவன், நீ தாழ்ந்தவன் என்ற வேறுபாடில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடலிது!
  “நான் மன்னன்! எனக்குப் பக்கத்திலே சாதாரண புலவனுக்கு இடம் தரவா?” என்ற எண்ணமே இல்லாமல் இறக்கும் தருவாயிலும் தனக்குப் பக்கத்திலே பிசிராந்தையாருக்கு இடம் தந்தார் கோப்பெருஞ்சோழன்! நட்பையும் தாண்டி ஆணவம் அழிந்த அன்பைத்தான் இங்கே காணமுடிகின்றது!
இவர்களெல்லாம், ‘தான்’ என்ற அகங்காரம் அழித்ததால் இன்றும் வாழ்கின்றார் நம்மிடையே! என்றும் வாழ்வார் தமிழ் நிலத்தில்!


புறநானூறு- 108

புறநானூற்றின் 108 ஆவது பாடல்.

பாரியின் கொடைச்சிறப்பினைப் பாடும் கபிலரின் பாடலிது
     “பாரி தன்னுடைய நாட்டினைத் தன்னை நாடி வந்த இரவலர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்துவிட்டான். இனி வருபவர்களுக்குக் கொடுப்பதற்குப் பறம்புமலை இல்லையென்றாலும் அவன் தன்னையே கொடுக்கின்றவன்” என்கின்றார் கபிலர்.
      பாரியின் தன்னையே தருகின்ற  தன்னிகரில்லா கொடைப் பண்பினை வெளிப்படுத்துகின்ற புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே.
கருத்துரை
மலைநிலத்து பெண்ணொருத்தி அடுப்பில் சந்தனமரக்கட்டையைச் செருகியிருந்தாள். அது எரிந்து,  வற்றியக் கொள்ளிக்கட்டையாகியது. அதிலிருந்து கிளம்பிய அழகிய புகை, அருகிலுள்ள மலைச்சாரலில் இருக்கும் வேங்கை மரத்தின் பூக்களோடுகூடிய கிளைகளில் தவழ்ந்தது. அத்தகு பறம்புமலையைத் தன்னைப் பாடிவந்த பரிசிலர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான் பாரி. இரவலர்க்கு வழங்குவதையே அறமாகக் கொண்டவன். அவனிடம், பரிசிலர் வந்து இரந்து பாரியையே பரிசாகக் கேட்டாலும் “நான் வரமாட்டேன்” என்று கூறமாட்டான். பரிசிலர் சொல்லியவுடன், அவர்களிடம் இவனாகவே போய் நிற்பான்.
சொற்பொருள் விளக்கம்
குறத்தி – குறிஞ்சி நிலப்பெண், மாட்டிய – (அடுப்பில்)செருகிய, வறல்-வற்றிய, கடைக் கொள்ளி-எரிந்து கடைசியாக இருக்கின்ற கொள்ளிக்கட்டை, ஆரம் ஆதலின்- சந்தனம் ஆதலின், அம்புகை – அழகிய புகை, அயலது – பக்கத்திலுள்ள, சாரல் –மலைச்சாரல்,  வேங்கை –வேங்கை மரம், பூஞ்சினை – பூக்களையுடைய கிளை, தவழும் –பரவும், பறம்பு பாடினர் – பறம்பினைப் பாடினோர்க்கு, அதுவே –அதனையே பரிசாக அளித்தவன், அறம்பூண்டு- அறத்தைப் பூண்டு,
பாரியும் – பாரியையும், பரிசிலர் இரப்பின் – பரிசிலர் இரந்தால்,
வாரேன் –வர மாட்டேன், என்னான்- என்று சொல்லமாட்டான், அவர்-பரிசிலர், வரையன்- எல்லையில் நிற்பன்.
கபிலர், தன்னுடைய ஆற்றாமையை, பாரி மேல் கொண்ட அன்பை, அளப்பரிய மரியாதையை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புகலுகின்ற பாடலாக  இப்பாடல் அமைந்துள்ளது. இரப்பவர் தாம் சென்று பாரியிடம் பெற்றுக் கொள்ளவேண்டியதில்லை; இவன் தானே சென்று தன்னையேக் கொடுப்பான் என்கிறார் கபிலர்.
மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் வேரூன்றிய காலகட்டத்தில், அறத்தோடு வாழ்ந்த பாரியின் பெருமையினைப் பேசுவதற்குக்கூட உரிமையில்லைபோலும்! அதனால்தான், இயற்கையின்மேல் வைத்து இனிய நண்பனின் உண்மையான இயல்பினைப் பாடுகின்றார், பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர்.
குறத்திப்பெண் எரித்தச் சந்தனக்கட்டையிலிருந்து எழுந்த புகையானது வேங்கை மரத்தின் பூங்கொம்புகளுக்கிடையே தவழ்ந்து மணம் வீசியது. எரிந்தும் மணம் தரும் சந்தனமரக்கட்டைபோல் பாரி இறந்தும் தன்னுடைய கொடைப்  பண்பால் உயர்ந்த புகழோடு விளங்குவான் என்கிறார், கபிலர்.
     அறம் பூண்டு கொடை செய்தான் பாரி; அறம் கொன்று அவனை அழித்தனர் மூவேந்தர்.                                                       தம் அன்புக்கினிய நண்பனின் பெருமையினைக் கபிலர் பாடாமல் வேறு யார் பாடமுடியும்?