புதன், 17 ஆகஸ்ட், 2022

குறுந்தொகை 10. தோழி கூற்று

 10. தோழி கூற்று

ஆசிரியர் ஓரம்போகியார் ஐங்குறுநூற்றில் மருதத்திணை 100 பாடல்களையும் எழுதியவர். அகநானூற்றில் இரண்டு பாடல்கள்- 286,316

குறுந்தொகையில் ஐந்து பாடல்கள்- 10, 70 ,122, 123, 384)

நற்றிணையில் இரண்டு- 20, 360

 

திணை -மருதம்

 

தலைமகனுக்கு தோழி வாயில் நேர்ந்தது

மருதநிலம். இதுதான் பாடல் களமாகிறது.  வயலும் வயல் சார்ந்த இடமும். வளமை அதிகம். பரத்தையற்பிரிவிற்கும் குறையிருக்காது.

பரத்தை இல்லம் சென்று வருகின்றான் தலைவன். தலைவியைக் காண விழைகின்றான். தோழி வருகின்றாள். அவளின்வழி தலைவியோடு சமரசம் செய்து விடலாம் என்று நினைக்கின்றான். இவனின் எல்லாச் செயல்களையும் அறிந்தவள் தோழி. ஆனால் தலைவனைப் பற்றி தலைவி தோழியிடம் இதுவரை எந்தக் குற்றமும் கூறியதில்லை. ஆனால் தோழிக்குத் தெரியும். அதனால் தலைவனிடம் சொல்கிறாள்…இதுவரைக்கும் தலைவி உன்னைப் பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை. இப்போதும் நீ வந்ததும் உன்னை ஏற்றுக் கொள்வாள். ஆனால் தலைவியின் இந்தச் செயல் உனக்குத்தான் நாணத்தைத் தரும். அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று சொல்வார்களே அதுபோல்தான் இங்கேயும் தலைவன் தன் செயலுக்காக நாணும் வகையில் தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள். அவள் தாய் போன்றவள். தலைவன் செல்வ வளத்தோடு  இருப்பதற்கு முதற்காரணமாக இருப்பவளும் அவள்தான்   என்று தோழி கூறுகின்றாள்

 

 

யாய் ஆகியளே விழவு முதலாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

மருதநிலத்திலே  உள்ள காஞ்சி மரங்களில் முற்றிய பயறுபோல் கொத்துக் கொத்தாக பூக்கள் காணப்படும். அந்தப் பூக்களில் பசுமையான மகரந்தத் தாதுக்கள் நிறைந்து காணப்படும். உழவர்கள் அந்தக் காஞ்சி மரங்களின் மெல்லிய கிளைகளை வளைக்கின்றனர். அப்போது அதிலுள்ள  பூந்தாதுக்கள் உழவர்களின் மேனியிலே விழுந்து படிகிறது. இத்தகைய காஞ்சி மரங்களையுடைய ஊருக்குத் தலைவன் நீ. இதுவரை நீ அவளுக்குச் செய்த கொடுமைகளைத் தலைவி என்னிடம் மறைத்துவிட்டாள். அதனால், இப்போதும் நீ வந்தவுடன் நீ நாணுமாறு உன்னை ஏற்றுக்கொள்வாள். ஏனென்றால் அவள் தாய் போன்றவள். நீ செல்வத்தோடு வாழ்வதற்கு முதற்காரணமும் அவள்தான். என்று தலைவனிடம் தோழி வாயில் நேர்கின்றாள். பிரச்சனை எதுவும் வராது நீ தலைவியைக் காணலாம் என்று சொல்கிறாள் தோழி.

இதிலே நம் குடும்ப அமைப்பின் ஆணி வேரும் இருக்கிறது.  நீ செல்வத்தோடு வாழ உன்னோடு இணைந்து பணியாற்றியவள். உனக்குள்ள மதிப்பு , செல்வம் இதற்கெல்லாம் காரணமும் அவள்தான். அப்படியிருக்க, இப்போது உன்னோடு பிரிவு ஏற்பட்டு இதன் மூலம் உன்னுடைய  மதிப்பு சமுதாயத்திலே குலையுமாறு செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையையும் தலைவனுக்குக் கொடுக்கின்றாள் தோழி. அன்றைய சமூகத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நீதி இருந்துள்ளமை பார்க்க முடிகிறது. கற்பென்று சொல்லவந்தால் இருபாலர்க்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னாலும்கூட இன்று வரை அதுதானே தொடர்கிறது?

உள்ளுறை

உழவர்களின் உடலில் உதிர்ந்து படிந்த காஞ்சிப் பூக்களின் மகரந்தப் பொடிகள் அவர்கள் காஞ்சி மரத்தை வளைத்ததைக் காட்டிவிடுகின்றன. அதேபோல் தலைவன் பரத்தை வீடு சென்று வந்ததை அவனுடைய மேனியில் பூசியுள்ள சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களின் வாசனையே காட்டிக் கொடுத்துவிடுகிறது.

 

புதன், 27 ஜூலை, 2022

குறுந்தொகை-8

குறுந்தொகை

8. காதற் பரத்தை கூற்று

தலைவி தன்னைப் பழித்துப் புறனுரைத்தாள் என்று தெரிந்த காதற்பரத்தைத் தலைவிக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு சொல்லியது

ஆசிரியர் ஆலங்குடி வங்கனார் – மருதத்திணைப் பாடல்

ஆலங்குடி வங்கனார், கடைச்சங்கத்துப் புலவர்கள் 49 பேரில் இவரும் ஒருவர். வங்கம் என்பது கப்பலைக் குறிக்கும். இதனால் இவர் கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த குடியினைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவர்.

இவர் சங்கப் பாடல்களில் 7 பாடல்களை எழுதியுள்ளார். குறுந்தொகையில் 2 (8,45) பாடல்கள், நற்றிணையில் 3(230, 330, 400)பாடல்கள், அகநானூறு-1 ( 106) பாடல். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள்(6) அனைத்தும் மருதத்திணையைச் சார்ந்தவை. புறநானூற்றில்-1(319)

கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்இல் பெருமொழி கூறித் தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.

பாடலின் பொருள்

கழனி மாத்து- வயல் அருகிலுள்ள மாமரத்தினது, விளைந்து உகு தீம்பழம்- கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பழன வாளை – பொய்கையிலுள்ள வாளை மீன்கள், கதூஉம் ஊரன்- கவ்வி உண்பதற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன், எம் இல் பெருமொழி கூறி – எம்முடைய வீட்டில் எம்மை பெருமைப்படுத்துகின்ற மொழிகளைக் கூறிவிட்டு, தம் இல்- தம்முடைய இல்லத்தில் , கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவைபோல- கண்ணாடியில் தோன்றுகின்ற உருவத்தைப் போல, தன் புதல்வன் தாய்க்கு- தன்னுடைய புதல்வனின்  தாய்க்கு, மேவன செய்யும்- அவள் விரும்பியதைச் செய்வான்.

இப்பாடலில் வரும் காதற்பரத்தை, இரண்டு உவமைகளைக் கையாண்டு, தான் எப்படிப்பட்டவள் என்பதையும் தலைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் எடுத்துரைக்கின்றாள்.

இந்தப்பாடலில் வரும் இரண்டு உவமைகள்

  1. வெளிப்படை உவமை

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல- என்ற உவமையின் வழி  தலைவன் அறிவில்லா தன்மையயைச் சுட்டிக்காட்டுகின்றாள்.

எம்மிடம், எம்மைப் பெருமைப்படுத்துகின்ற மொழிகளைக் கூறிவிட்டு, தன்னுடைய புதல்வனின் தாயிடம் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவைபோல அவளின் விருப்பப்படி நடக்கின்றான் என்கின்றாள்.கண்ணாடியில் தெரியும் பிம்பம் முன்னிற்பர் கை கால்களைத் தூக்கினால்  அதுவும் தூக்கும் . அவ்வளவே. அதற்காக அறிவு கிடையாது . அதுபோன்றவன்தான் தலைவனும் என்பதே பரத்தையின் வாதம்.

  1. உள்ளுறை உவமம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன் – என்றதனால், தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.

வயல் அருகிலுள்ள மாமரத்தில் கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளைமீன்கள் கவ்வி உண்கின்ற ஊரன் என்று கூறும்போது தன்நிலையைச் சுட்டிக்காட்டுகின்றாள். மாமரத்திலிருந்து தானாக விழுந்த பழத்தை, பொய்கையிலுள்ள வாளைமீன் கவ்வி உண்பதைப் போலத்தான் எம்மிடம் அவன் வந்து உறவாடினான் என்கின்றாள். நாங்கள் அவனிடம் வலிந்துசென்று உறவு கொள்ளவில்லை என்பதை அழகிய உவமையின்வழி வெளிப்படுத்துகின்றாள் 

வியாழன், 21 ஜூலை, 2022

சங்கப் பாடல்களை அறிவோம்

 சங்கப் பாடல்களை அறிவோம்

பேரா.முனைவர் ருக்மணி இராமச்சந்திரன்.

சங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்... அப்படி மன்னன் வாழாதநிலையில் அவனை வழிப்படுத்தி அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களே செய்துள்ளனர். மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப்பாடல் இது. பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர். 

மன்னனாகட்டும்...கல்லாத மக்களாகட்டும்... இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், பலவற்றை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் செய்கின்றார் புலவர்.. புறநானூற்றின் 189 ஆவது பாடல். இதோ பாடல்..

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

கருத்துரை

தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற மன்னர்களுக்குப் பொதுவாக்காமல் தானே ஆட்சி செய்த ஒரு மன்னனாக இருந்தாலும் நடு இரவிலும் பகலிலும் துயிலாது விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லா ஒருவனாக இருப்பினும் உண்பது நாழி உணவே. உடுப்பது இரண்டு ஆடையே. பிற தேவைகள் இருவருக்கும் ஒன்றே. ஆதலால், செல்வத்தைப் பெற்ற பயன், பிறருக்குக் கொடுத்தலாகும். நான் பெற்ற செல்வத்தை நானே அனுபவிப்பேன் என்றால் நமக்குக் கிடைக்காமல் போவன பலவாகும்.

மன்னனுக்கும் சாமானிய  மனிதனுக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமென்றால் உணவிலும் உடையிலும்  காட்டலாம். உயர்ந்த ஆடை, உயர்தர உணவு என்று! ஆனால், அதையும் நீ நாழி உணவுதான் உண்ணமுடியும். இரண்டு ஆடையைத்தான் உடுத்த முடியும். இதற்குமேல் உணவை உண்ணவும் முடியாது, ஆடையை உடுக்கவும் முடியாது. இதைத் தவிர மனிதனின் மற்ற உடல், மனத் தேவைகளும் உணர்ச்சிகளும் இருவருக்கும் ஒன்றுதானே?  செல்வம் இருப்பதால் மட்டும் நீ வாழ்ந்தவனாகிவிட மாட்டாய்; கொடுப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். கடைசியாக ஒரு வார்த்தையைச் சொல்லுகிறார் பாருங்கள்...அப்படி யாராவது வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தால் வாழ்க்கையில் தவறவிடுவனவைதான் அதிகம் என்கிறார். ‘சிலவே’ என்றுகூடச் சொல்லவில்லை, ‘பலவே’ என்கிறார் நக்கீரர். அப்படி நினைப்பவர்களுக்கு நம் புலவர் கொடுக்கும் சாட்டைஅடி இது. 

இதற்கெல்லாம் மேலாக, இதையெல்லாம் தமிழன் அன்றைக்கே சிந்தித்தான் என்பதுதான் தமிழினத்தின் பெருமை; தமிழரின் தகமை.