புதன், 17 ஆகஸ்ட், 2022

குறுந்தொகை 10. தோழி கூற்று

 10. தோழி கூற்று

ஆசிரியர் ஓரம்போகியார் ஐங்குறுநூற்றில் மருதத்திணை 100 பாடல்களையும் எழுதியவர். அகநானூற்றில் இரண்டு பாடல்கள்- 286,316

குறுந்தொகையில் ஐந்து பாடல்கள்- 10, 70 ,122, 123, 384)

நற்றிணையில் இரண்டு- 20, 360

 

திணை -மருதம்

 

தலைமகனுக்கு தோழி வாயில் நேர்ந்தது

மருதநிலம். இதுதான் பாடல் களமாகிறது.  வயலும் வயல் சார்ந்த இடமும். வளமை அதிகம். பரத்தையற்பிரிவிற்கும் குறையிருக்காது.

பரத்தை இல்லம் சென்று வருகின்றான் தலைவன். தலைவியைக் காண விழைகின்றான். தோழி வருகின்றாள். அவளின்வழி தலைவியோடு சமரசம் செய்து விடலாம் என்று நினைக்கின்றான். இவனின் எல்லாச் செயல்களையும் அறிந்தவள் தோழி. ஆனால் தலைவனைப் பற்றி தலைவி தோழியிடம் இதுவரை எந்தக் குற்றமும் கூறியதில்லை. ஆனால் தோழிக்குத் தெரியும். அதனால் தலைவனிடம் சொல்கிறாள்…இதுவரைக்கும் தலைவி உன்னைப் பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை. இப்போதும் நீ வந்ததும் உன்னை ஏற்றுக் கொள்வாள். ஆனால் தலைவியின் இந்தச் செயல் உனக்குத்தான் நாணத்தைத் தரும். அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று சொல்வார்களே அதுபோல்தான் இங்கேயும் தலைவன் தன் செயலுக்காக நாணும் வகையில் தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள். அவள் தாய் போன்றவள். தலைவன் செல்வ வளத்தோடு  இருப்பதற்கு முதற்காரணமாக இருப்பவளும் அவள்தான்   என்று தோழி கூறுகின்றாள்

 

 

யாய் ஆகியளே விழவு முதலாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

மருதநிலத்திலே  உள்ள காஞ்சி மரங்களில் முற்றிய பயறுபோல் கொத்துக் கொத்தாக பூக்கள் காணப்படும். அந்தப் பூக்களில் பசுமையான மகரந்தத் தாதுக்கள் நிறைந்து காணப்படும். உழவர்கள் அந்தக் காஞ்சி மரங்களின் மெல்லிய கிளைகளை வளைக்கின்றனர். அப்போது அதிலுள்ள  பூந்தாதுக்கள் உழவர்களின் மேனியிலே விழுந்து படிகிறது. இத்தகைய காஞ்சி மரங்களையுடைய ஊருக்குத் தலைவன் நீ. இதுவரை நீ அவளுக்குச் செய்த கொடுமைகளைத் தலைவி என்னிடம் மறைத்துவிட்டாள். அதனால், இப்போதும் நீ வந்தவுடன் நீ நாணுமாறு உன்னை ஏற்றுக்கொள்வாள். ஏனென்றால் அவள் தாய் போன்றவள். நீ செல்வத்தோடு வாழ்வதற்கு முதற்காரணமும் அவள்தான். என்று தலைவனிடம் தோழி வாயில் நேர்கின்றாள். பிரச்சனை எதுவும் வராது நீ தலைவியைக் காணலாம் என்று சொல்கிறாள் தோழி.

இதிலே நம் குடும்ப அமைப்பின் ஆணி வேரும் இருக்கிறது.  நீ செல்வத்தோடு வாழ உன்னோடு இணைந்து பணியாற்றியவள். உனக்குள்ள மதிப்பு , செல்வம் இதற்கெல்லாம் காரணமும் அவள்தான். அப்படியிருக்க, இப்போது உன்னோடு பிரிவு ஏற்பட்டு இதன் மூலம் உன்னுடைய  மதிப்பு சமுதாயத்திலே குலையுமாறு செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையையும் தலைவனுக்குக் கொடுக்கின்றாள் தோழி. அன்றைய சமூகத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நீதி இருந்துள்ளமை பார்க்க முடிகிறது. கற்பென்று சொல்லவந்தால் இருபாலர்க்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னாலும்கூட இன்று வரை அதுதானே தொடர்கிறது?

உள்ளுறை

உழவர்களின் உடலில் உதிர்ந்து படிந்த காஞ்சிப் பூக்களின் மகரந்தப் பொடிகள் அவர்கள் காஞ்சி மரத்தை வளைத்ததைக் காட்டிவிடுகின்றன. அதேபோல் தலைவன் பரத்தை வீடு சென்று வந்ததை அவனுடைய மேனியில் பூசியுள்ள சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களின் வாசனையே காட்டிக் கொடுத்துவிடுகிறது.