குறுந்தொகை
8. காதற் பரத்தை கூற்று
தலைவி தன்னைப்
பழித்துப் புறனுரைத்தாள் என்று தெரிந்த காதற்பரத்தைத் தலைவிக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு
சொல்லியது
ஆசிரியர் ஆலங்குடி வங்கனார் – மருதத்திணைப்
பாடல்
ஆலங்குடி வங்கனார், கடைச்சங்கத்துப்
புலவர்கள் 49 பேரில் இவரும் ஒருவர். வங்கம் என்பது கப்பலைக் குறிக்கும். இதனால் இவர்
கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த குடியினைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள்
கருதுவர்.
இவர் சங்கப் பாடல்களில் 7 பாடல்களை
எழுதியுள்ளார். குறுந்தொகையில் 2 (8,45) பாடல்கள், நற்றிணையில் 3(230, 330, 400)பாடல்கள்,
அகநானூறு-1 ( 106) பாடல். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள்(6) அனைத்தும் மருதத்திணையைச்
சார்ந்தவை. புறநானூற்றில்-1(319)
கழனி மாஅத்து
விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை
கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி
கூறித் தம்இல்
கையும் காலும்
தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை
போல
மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே.
பாடலின் பொருள்
கழனி மாத்து- வயல் அருகிலுள்ள மாமரத்தினது,
விளைந்து உகு தீம்பழம்- கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பழன வாளை – பொய்கையிலுள்ள வாளை
மீன்கள், கதூஉம் ஊரன்- கவ்வி உண்பதற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன், எம் இல் பெருமொழி
கூறி – எம்முடைய வீட்டில் எம்மை பெருமைப்படுத்துகின்ற மொழிகளைக் கூறிவிட்டு, தம் இல்-
தம்முடைய இல்லத்தில் , கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவைபோல- கண்ணாடியில் தோன்றுகின்ற
உருவத்தைப் போல, தன் புதல்வன் தாய்க்கு- தன்னுடைய புதல்வனின் தாய்க்கு, மேவன செய்யும்- அவள் விரும்பியதைச் செய்வான்.
இப்பாடலில் வரும் காதற்பரத்தை, இரண்டு
உவமைகளைக் கையாண்டு, தான் எப்படிப்பட்டவள் என்பதையும் தலைவன் எப்படிப்பட்டவன் என்பதையும்
எடுத்துரைக்கின்றாள்.
இந்தப்பாடலில் வரும் இரண்டு உவமைகள்
- வெளிப்படை உவமை
கையும் காலும் தூக்கத்
தூக்கும்
ஆடிப்பாவை போல- என்ற
உவமையின் வழி தலைவன் அறிவில்லா தன்மையயைச்
சுட்டிக்காட்டுகின்றாள்.
எம்மிடம், எம்மைப் பெருமைப்படுத்துகின்ற
மொழிகளைக் கூறிவிட்டு, தன்னுடைய புதல்வனின் தாயிடம் கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவைபோல அவளின் விருப்பப்படி நடக்கின்றான் என்கின்றாள்.கண்ணாடியில் தெரியும் பிம்பம்
முன்னிற்பர் கை கால்களைத் தூக்கினால் அதுவும்
தூக்கும் . அவ்வளவே. அதற்காக அறிவு கிடையாது . அதுபோன்றவன்தான் தலைவனும் என்பதே பரத்தையின்
வாதம்.
- உள்ளுறை உவமம்
கழனி மாஅத்து விளைந்து
உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
– என்றதனால், தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.
வயல் அருகிலுள்ள மாமரத்தில் கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளைமீன்கள் கவ்வி உண்கின்ற ஊரன் என்று கூறும்போது தன்நிலையைச் சுட்டிக்காட்டுகின்றாள். மாமரத்திலிருந்து தானாக விழுந்த பழத்தை, பொய்கையிலுள்ள வாளைமீன் கவ்வி உண்பதைப் போலத்தான் எம்மிடம் அவன் வந்து உறவாடினான் என்கின்றாள். நாங்கள் அவனிடம் வலிந்துசென்று உறவு கொள்ளவில்லை என்பதை அழகிய உவமையின்வழி வெளிப்படுத்துகின்றாள்