செவ்வாய், 25 ஜூலை, 2017

புறநானூறு- 108

புறநானூற்றின் 108 ஆவது பாடல்.

பாரியின் கொடைச்சிறப்பினைப் பாடும் கபிலரின் பாடலிது
     “பாரி தன்னுடைய நாட்டினைத் தன்னை நாடி வந்த இரவலர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்துவிட்டான். இனி வருபவர்களுக்குக் கொடுப்பதற்குப் பறம்புமலை இல்லையென்றாலும் அவன் தன்னையே கொடுக்கின்றவன்” என்கின்றார் கபிலர்.
      பாரியின் தன்னையே தருகின்ற  தன்னிகரில்லா கொடைப் பண்பினை வெளிப்படுத்துகின்ற புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே.
கருத்துரை
மலைநிலத்து பெண்ணொருத்தி அடுப்பில் சந்தனமரக்கட்டையைச் செருகியிருந்தாள். அது எரிந்து,  வற்றியக் கொள்ளிக்கட்டையாகியது. அதிலிருந்து கிளம்பிய அழகிய புகை, அருகிலுள்ள மலைச்சாரலில் இருக்கும் வேங்கை மரத்தின் பூக்களோடுகூடிய கிளைகளில் தவழ்ந்தது. அத்தகு பறம்புமலையைத் தன்னைப் பாடிவந்த பரிசிலர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான் பாரி. இரவலர்க்கு வழங்குவதையே அறமாகக் கொண்டவன். அவனிடம், பரிசிலர் வந்து இரந்து பாரியையே பரிசாகக் கேட்டாலும் “நான் வரமாட்டேன்” என்று கூறமாட்டான். பரிசிலர் சொல்லியவுடன், அவர்களிடம் இவனாகவே போய் நிற்பான்.
சொற்பொருள் விளக்கம்
குறத்தி – குறிஞ்சி நிலப்பெண், மாட்டிய – (அடுப்பில்)செருகிய, வறல்-வற்றிய, கடைக் கொள்ளி-எரிந்து கடைசியாக இருக்கின்ற கொள்ளிக்கட்டை, ஆரம் ஆதலின்- சந்தனம் ஆதலின், அம்புகை – அழகிய புகை, அயலது – பக்கத்திலுள்ள, சாரல் –மலைச்சாரல்,  வேங்கை –வேங்கை மரம், பூஞ்சினை – பூக்களையுடைய கிளை, தவழும் –பரவும், பறம்பு பாடினர் – பறம்பினைப் பாடினோர்க்கு, அதுவே –அதனையே பரிசாக அளித்தவன், அறம்பூண்டு- அறத்தைப் பூண்டு,
பாரியும் – பாரியையும், பரிசிலர் இரப்பின் – பரிசிலர் இரந்தால்,
வாரேன் –வர மாட்டேன், என்னான்- என்று சொல்லமாட்டான், அவர்-பரிசிலர், வரையன்- எல்லையில் நிற்பன்.
கபிலர், தன்னுடைய ஆற்றாமையை, பாரி மேல் கொண்ட அன்பை, அளப்பரிய மரியாதையை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புகலுகின்ற பாடலாக  இப்பாடல் அமைந்துள்ளது. இரப்பவர் தாம் சென்று பாரியிடம் பெற்றுக் கொள்ளவேண்டியதில்லை; இவன் தானே சென்று தன்னையேக் கொடுப்பான் என்கிறார் கபிலர்.
மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் வேரூன்றிய காலகட்டத்தில், அறத்தோடு வாழ்ந்த பாரியின் பெருமையினைப் பேசுவதற்குக்கூட உரிமையில்லைபோலும்! அதனால்தான், இயற்கையின்மேல் வைத்து இனிய நண்பனின் உண்மையான இயல்பினைப் பாடுகின்றார், பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர்.
குறத்திப்பெண் எரித்தச் சந்தனக்கட்டையிலிருந்து எழுந்த புகையானது வேங்கை மரத்தின் பூங்கொம்புகளுக்கிடையே தவழ்ந்து மணம் வீசியது. எரிந்தும் மணம் தரும் சந்தனமரக்கட்டைபோல் பாரி இறந்தும் தன்னுடைய கொடைப்  பண்பால் உயர்ந்த புகழோடு விளங்குவான் என்கிறார், கபிலர்.
     அறம் பூண்டு கொடை செய்தான் பாரி; அறம் கொன்று அவனை அழித்தனர் மூவேந்தர்.                                                       தம் அன்புக்கினிய நண்பனின் பெருமையினைக் கபிலர் பாடாமல் வேறு யார் பாடமுடியும்?


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக