செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தமிழரின் அகஅறம் – தமிழின் வளம்


                          தமிழரின் அகஅறம் – தமிழின் வளம்
தமிழரின் அறத்தொடு நிற்றல் தமிழின் வளம்.  தமிழரின் அறத்தொடு நிற்றல் பிறமொழிகளில்,  ஏன்? ஆரிய அரசன் பிரகதத்தனின் வடமொழியிலும் இல்லாத பெருஞ்சிறப்புடைத்து என்பதே கபிலரின் துணிபு. அதை ஆரிய அரசனுக்குச் சொல்லும் அன்புடை அகவாழ்வுப் பாட்டே குறிஞ்சிப்பாட்டு எனலாம்
தமிழரின் களவும் வடவரின் காந்தருவ மணமும்
இலக்கியத்தில் அகம் இருக்கலாம் . ஆனால் அந்த அகத்திலும்கூட அறமுண்டு என்று தமிழின் அகவியல்பை அன்பொழுக அறியத் தந்தவர் கபிலர். எம்முடைய களவும் கற்பும், களவைக் கற்பாக்கும் திறனும் எமக்கே உரிய, உயிர் போன்ற பண்பாட்டுப் பாரம்பரியம். தலைவி தன் மனத்துள் வரித்தவனையே மணந்து கொள்ள தோழி எடுக்கும் அறிவுடை முயற்சிகளே, அறத்தொடு நிற்றல். ஆரிய அரசனின், ‘எம் வடமொழியைக் காட்டிலும் உம் தமிழ்மொழி எவ்வகையில் சிறப்புடைத்து?’ என்ற வினாவிற்குப் பதிலளிப்பதுபோல, இதுதான் எம் சிறப்பு’  என்று குறிஞ்சிப்பாட்டின்வழி அறியத் தந்துள்ளார் கபிலர்.
          இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
          அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
          காமக்கூட்டம் காணும் காலை
          மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
          துறையமை நல்யாழ் துணைமையோர் இயல்பே.(தொல். பொருள். 89)
என்று தொல்காப்பியர் களவுக்காலத்தைச் சொல்லும்போது, ஆரியத்தின் காந்தருவ மணம் போன்றதாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இங்கு இறுதி .இரண்டு அடிகள், அந்தக் கருத்தை உணர்த்துவதாக இருப்பினும், முதலிரண்டு அடிகள்  களவு மணம் நமக்கே உரியது; இது காந்தருவமணத்திலிருந்து மாறுபட்டது என்பதை அறியத்தருவது. காந்தருவ மணம், தலைவனும் தலைவியும் பிறரறியாமல் ஊழ்வயத்தால் எதிர்ப்பட்டு கூடுதல்; தமிழர் மணமோ, களவிலே கலப்பினும் நன்மணம் பூண்டு நாடறிய இன்பமும் பொருளும் அறனும் இணைய அன்புற்று வாழும் வாழ்க்கை.
அகவாழ்வில் அறம்
களவு வாழ்க்கையை நாடறி நன்மணமாக மாற்றும் முயற்சியே அறத்தொடு நிற்றல். களவோடு முடிவதல்ல தமிழர் மணம்; களவையே அறவாழ்வாக வாழத் தலைப்படுதலே தமிழர் மணம் என ஆரிய அரசன் பிரகதத்தனுக்குப் பன்னிப் பன்னிப் புரிய வைக்கிறார் கபிலர். கபிலரின் குறிஞ்சிபாடும் சொல்வன்மை, இக்கோல் குறிஞ்சியில் கொஞ்சி விளையாடுகிறது.
ஆரிய அரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய இப்பாட்டு, தமிழையும் தமிழ் பொருள் இலக்கணத்தையும் மட்டுமா உணர்த்தியது? தமிழர் நாகரிகம், பண்பாடு, சமுதாயக் கட்டமைப்பு, பெண்ணின் எதிர்பார்ப்பு, உறுதிப்பாடு, இயற்கையோடு இனிது வாழ்ந்த இன்பம் என்று இவையனைத்துமே இணைந்த அன்புத் தமிழையல்லவா உணர்த்தியது?
அகவாழ்வில் அறம் நாடிய தலைவியும் தலைவனும்
தான் காணாதுவிட்டதை இவ்விடம் கண்டீரோ? ஒரு சொல்லேனும் பேசக்கூடாதா என்று கூறியபோது அந்நிய ஆடவனிடம் பேசத் தயங்கிய பெண்மை, யானை துரத்தி வந்தபோது அச்சமும் நாணமும் முந்துறுத்த அவனிடமே புகலடையும் பெண்மை, அன்பு கனிய அவன் வரும் வழியின் ஆபத்து அறிந்து கலங்குகின்ற பெண்மை,  தாய்க்கு உரைப்பதில் பழியும் உண்டோ?என்று  துணிந்து கூற முற்பட்ட  பெண்மை என்று தமிழ்ப் பெண்மையைக்  குறிஞ்சிப்பாட்டிலே காட்டுகின்றார் கபிலர்.
ஒள்நுதற்கு உடையும் ஒப்பற்ற ஆண்மையையும் சித்தரிக்கத் தவறவில்லை. சுற்றம் போற்றி, ஒச்சமில் உயர்வாழ்வு வாழத் துடிக்கின்ற ஆண்மை; மலையுறை தெய்வத்தின் முன் சூளுரைத் தந்து நன் மணம் புணர நயக்கின்ற ஆண்மை;களவிலே ஒன்றுபடினும் பெற்றோர் இசைவுடன் கற்புமணம் புரிதல்வேண்டும் என்ற  அகஅறம் பேணும் ஆண்மை; இப்படி பெண்மையும் ஆண்மையும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பமாகிய அறத்தைச் சொல்லுவதே குறிஞ்சிப்பாட்டு. தமிழரின் அகவாழ்வு அறத்தை அடிப்படையாகக் கொண்டதே என்பதைக் குறிஞ்சிக் காதல் வழி அனைவருக்கும் அறியத் தந்துள்ள கபிலரின் முயற்சியே குறிஞ்சிப் பாட்டு. அறத்தொடு நின்று ஆற்றுப்படுத்தும் தோழி
தமிழரின் அகவாழ்க்கை இலக்கியங்களில் அறம்பேணும் அரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவள் தோழி.  தலைவியின் நல்வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டவள். தலைவியின் உள்ள நாட்டத்தினை அன்னையிடம் அமைதியாகச் சொல்லி, அன்னையின் மனம் அரற்றாது, ஆர்ப்பரிக்காது, வெதும்பாது, விம்பாது இருக்க எப்படி எப்படி கூற வேண்டுமோ, அப்படி மெல்ல மெல்ல வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றுகின்றாள்; ‘நான் சொல்லுவது கசப்பான உண்மை. கேட்டதும் உனக்குக் கோபம் வரும்; ஆனால் சினத்தைப் பொறுத்துக் கொள் அம்மா’ என்கின்றாள்.
          அம்மா நீயும் தலைவியின் நோய்க்குக் காரணம் புரியாமல் வருந்துகின்றாய். தலைவியோ உள்ளத் துயரை உரைக்க முடியாமல் உழலுகின்றாள். நானும் தலைவியிடம் கேட்டேன். அவளும் சொன்னாள்; ‘நான் தலைவனோடு கொண்ட காதலை வெளியிட்டால் நம் குடிக்கு பழி ஏற்படுமோ? மனதிலே நினைத்தவனை ஊரறிய மணம் செய்து கொடுக்கவில்லையானால், மறுபிறவியிலேனும் அவனும் நானும் ஒன்று சேருவோம்’ என்று கூறி கண் கலங்கினாள். நானும் உன்னிடம் சொல்ல அஞ்சுகின்றேன். எனினும் உன் சம்மதமில்லாமல் நாங்கள் தேர்ந்தெடுத்த ஏமம் சால் அருவினையாகிய இச்செயலைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
          தினைப்புனம் காப்பதற்கு எம்மை அனுப்பினாய். நாங்களும் தினைப்புனம் காவலை ஒழுங்காகச் செய்தோம். உச்சிப்பொழுதில் அருவியில் ஆடினோம். பல மலர்களைத் தேடிப் பிடித்து பறித்து வந்து பாறையில் குவித்துத் தழையாடை தொடுத்தோம். தலையிலே சூடினோம். இப்படியாக அசோக மர நிழலில் இளைப்பாறி இருந்தோம். காளையொருவன் வந்தான்; கண்கவரும் வனப்பினன்; கையிலே வில்; காலிலே கழல்; அவனோடு வேட்டை நாய்களும் வந்தன; அவை கண்டு அஞ்சி வேற்றிடம் செல்ல முனைந்தோம்; எம்மருகில் வந்தான் அவன்; இன்சொல் பேசி எம் மெல்லியல்பு புகழ்ந்தான்; எம்மிடமிருந்து தப்பிச் சென்ற விலங்குகள் திசை தப்பி இவ்விடம் வந்தனவோ என்று வினாவினான். நாங்கள் அமைதியாக இருந்தோம்; தப்பிப்போனதின் தடம் காட்டாவிடினும் மறுமொழியேனும் பேசக் கூடாதா என்றான். அந்நேரம் கானவர் விரட்டிய யானை ஒன்று எம்மை நோக்கி ஓடி வந்தது. நாங்களும் பயந்து, மயில் போல் நடுங்கி அவன் பக்கலில் நெருங்கினோம். அவனோ, யானையின் மேல் அம்பெய்தான். அம்பு தைத்த யானை  வந்தவழி பார்த்து போயிற்று.
          யானை போனாலும் எம் நடுக்கம் தீரவில்லை. நடுக்கத்துடன் நின்றிருந்தோம். அவன் தலைவியைப் பார்த்து, பயப்படாதே, உன் அழகை நுகர்வேன்’ என்றான். என்னையும் நோக்கி முறுவலித்தான். தலைவியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன். பிரிதலும் இலேன் என்று கூறி மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் தலைவியிடம் உறுதியளித்தான் தலைவன். அருவி நீரை அள்ளிப் பருகி ஆணையிட்டான்.
          மாலை நேரமும் வந்தது. இருவரும் பிரிய வேண்டிய கட்டாயம், தன்னைப் பிரிதற்குத் தலைவி வருந்துவாள் என்பது தலைவனுக்கும் தெரியும். அதனால் சில நாட்களிலே உன்னை நாடறிய மணம் செய்வேன். அதுவரை பொறுத்திரு என்று ஆறுதல் சொல்லி ஆற்றுவித்தான். அவன் உயர்குடி பிறந்தவன்வாய்மை தவறாதவன்; தலைவியை மணந்து கொள்ளும் விருப்பமுடையவன்; இத்தகு நல்லியல்பினனாகிய தலைவன், எம்மைப் பிரிய மனமின்றி நம் ஊருணிக்கரை வரை வந்தான்; பின்னர் அகலாக் காதலோடு அகன்று சென்றான். அதுநாள் முதல் தலைவியைக் காண இரவிலே வருகின்றான். அவன் இரவில் வரும் ஏதம் எண்ணி இவளும் (தலைவியும்) கலங்குகின்றாள். இதுதான் அவள் நோய் என்று உண்மையை உரைத்தாள் தோழி!
 “தலைவன் கேண்மையன்; அவன் சுற்றமும் சூழலும் இனிது; தலைவியும் தலைவனை மணக்கப் பெற்றோர் மறுப்பினும், மறுபிறப்பிலேனும் தலைவனை அடைவேன் என்ற உறுதியினை உடையவள்” என்று படிப்படியாகக்கூறி தலைவியின் அறவாழ்வுக்கு அடிப்படையாக இருந்தவள் தோழி.
இவ்வாறு, குறிஞ்சிப்பாட்டில் வரும் கூற்றுக்கள் அனைத்துமே தமிழரின் பண்பாட்டுத்தளத்தின் ஆணிவேரினைத் தொட்டுக் காட்டும் வரிகளாகவே அமைந்துள்ளன.  அகவாழ்விலும் அறத்தை முன்னிறுத்திய தமிழரின் மேம்பட்ட வாழ்க்கையே இலக்கியமாகப் பரிணமித்துள்ளன. அத்தகைய அகவாழ்வே குறிஞ்சிக் காதலின் கரவிலா மணம்; தமிழர் தம் பண்பாட்டின் தகவுடை குணம்.
          அகவாழ்வையே அறவாழ்வாக வாழ்ந்தமையே தமிழரின் அறம்; அதுவே தமிழின் வளம் என்பதைச் சொல்லுவதே குறிஞ்சிப்பாட்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக