Saturday, May 26, 2018

கொற்கை வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்கொற்கை வெற்றிவேல் அம்மனும்
வெற்றிவேல் செழியனும்
தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கின்றபோது நாட்டுப்புறம் சார்ந்த கதை, பாடல், வழிபாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராயின் பல புதிய தகவல்களையும், வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களையும் பெறக்கூடியதாய் உள்ளது. அவ்வகையில் பழந்தமிழரின் தலைநகராய் விளங்கிய கொற்கையில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற வெற்றிவேல் அம்மன் வழிபாடும் வழிபாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் இலக்கியச் சான்றுகளும் வாய்மொழிச் செய்திகளும் தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யத் தூண்டுவனவாய் அமைந்துள்ளன.
கொற்கை வெற்றிவேல் அம்மன்
          பழம்பாண்டியர்களின் தலைநகராகவும் சங்க இலக்கியத்தில் தம் பெருமையை பதித்துக்கொண்ட கடற்கரைத் துறைமுகமாகவும் இலங்கியது கொற்கை நகரம்.
          முத்துக்களும் பலவகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப் பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் (மதுரைக்காஞ்சி. 312 – 323) மதுவகைகளும் கண்ணாடிச் சாமான்களும் (புறம். 56:18) கொற்கைப் பெருந்துறைக்கு வந்திறங்கின1 என்பதால் கொற்கையின் சிறப்பினை அறிய முடிகின்றது.
          தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் கொற்கை அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் கிழக்கிலும் உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
          கொற்கையை மதுரோதயநல்லூர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன2
          பொற்கை என்று கொற்கைச் செப்பேட்டுப் பிரதியில் இடம்பெற்றுள்ளது. கடைச்சங்க காலத்தில் விளங்கிய பாண்டிய மன்னர்களுள் ஒருவர் பொற்கைப் பாண்டியன். கண்ணகி முன் தோன்றிய மதுராபுரித் தெய்வம் பாண்டியர்களின் செங்கோல் பெருமையைக் கூறும்போது பொற்கைப் பாண்டியன் பெருமையை (சிலம்பு 23: 49-53) எடுத்துரைத்துள்ளது.
          கி.பி. 130 வரை கொற்கை, பாண்டியரின் தலைநகராக இருந்த செய்தியை தாலமி என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். கொற்கை தலைநகராக இருந்தபோது அதனை ஆட்சி செலுத்தியப் பொற்கைப் பாண்டியனின் செங்கோல் திறத்தைப் பாராட்டுமுகமாக தலைநகர்பொற்கைஎன்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கொள்ளலாம். இன்றும் ஊர் விழாக்களில் பொற்கை என்றே கொற்கை குறிக்கப்படுவதைக் காணக் கூடியதாய் உள்ளது.
          பண்டைத் தமிழகத்தின் தலைநகராக விளங்கிய கொற்கையில் குளத்தின் நடுவில் அமைந்துள்ளதேவெற்றிவேல் அம்மன்கோவில். நாட்டுப்புற தெய்வமாக விளங்கும் இவ் வெற்றிவேல் அம்மன், வரலாற்று மீட்டுருவாக்கத்தில் பெறுகின்ற இடத்தை ஆய்வதே இக்கட்டுரை.
வெற்றிவேல் அம்மனும் வெற்றிவேல் செழியனும்
          மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தீர்ப்பால் உயிர் மாய்கிறான். கண்ணகியும் உயிர் துறக்க, பத்தினித் தெங்வத்திற்கு வழிபாடு நிகழ்த்த எண்ணிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயம் சென்று, கல்லெடுத்து கனகவிசயர் தலைமேல் ஏற்றிக்கொண்டு மீள்கிறான். வழியில் கங்கையின் தென்கரையில், குமரித்துறை படிந்து கங்கை ஆடச் சென்ற மாடலமறையோனைச் சந்திக்கின்றான். அவன் கொற்கைக்கோமான் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த செய்தியைக் கூறுகிறான்.
            கொற்கையில் இரந்த வெற்றிவேற் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைந் நூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி3
இவ்விலக்கியச் சான்றால் கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த பிறகே செங்குட்டுவன் வஞ்சியில் கண்ணகிக்குச் சிலை வடித்து விழா எடுத்தான் என்பது பெறப்படுகிறது.
          கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்தப் பின்னர்தான் மதுரைக்குச் சென்று அரசாட்சியை ஏற்றார் என்பதும்
            ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்மதைக் காக்கும் முறைமுதற் கட்டிலின்
நிறைமணிப் புரவி ஓர் ஏழ்பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினான் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினான்4         
என்ற சிலப்பதிகாரத் தொடர்களால் அறியப்படுகிறது.
கொற்கையில் வெற்றிவேல் செழியனால் விழா எடுக்கப்பட்ட கண்ணகி வழிபாடே வெற்றிவேல் அம்மன் வழிபாடாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இன்றும் கொற்கை மாநகரில் நடைபெற்று வருகிறது. இடப்புறத்தில் தலையைச் சாய்த்திருக்கும் அம்மனின் சிலைக்கு ஊர்மக்கள் கூறுகின்ற காரணமும் வழிவழியாக கண்ணகி வழிபாடு கொற்கையில் இருந்து வந்த வரலாற்றுச் சுவட்டைக் காட்டுவதாகவே உள்ளது. ஆயிரம் பொற்கொல்லர்களை அழைத்து வந்து வெற்றிவேற் செழியன் ஒரு மாலை பொழுதிலே உயிர்ப்பலி ஊட்டி சாந்தி செய்தபோது அது கண்ட கண்ணகி தாங்க மாட்டாது தலை அசைத்தாள்5 என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இன்றும் தலை சாய்ந்த நிலையிலேதான் அம்மனின் சிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியனால் கொற்கையில் விழா எடுத்து வழிபாடு செய்யப்பட்ட கண்ணகியின் வழிபாடு, கண்ணகி வழிபாட்டை நடத்திய வெற்றிவேல் செழியனின் பெயரால் வெற்றிவேல் அம்மன் என்றும், செழிய நங்கை என்றும் அழைக்கப்பட்டு மக்களால் தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
முடிபு
கண்ணகிக்குக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான் சேரன்  என்று சேரனுக்கு அளிக்கப்பெற்ற முதன்மை நிலை, பாண்டியனுக்கு அளிக்கப்படாமையை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு கொற்கைவெற்றிவேல் அம்மன்என்ற நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு வாய்ப்பளிக்கிறது.
வெற்றிவேற் செழியனால் வழிபாடு செய்யப்பெற்றதால் கண்ணகி வழிபாடு, மன்னனின் பெயரால் இன்று வெற்றிவேல் அம்மனாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இருக்கின்ற காரணம் பற்றி அதன் வரலாற்றுப் பின்னணி மறைக்கப்படாமல் மீட்டுருவாக்கம் செய்யப்படுதல் அவசியமாகிறது.
வாய்மொழியாக வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற மக்களின் இலக்கியங்களே வரலாற்று ஆதாரங்களாகவும் இலங்குகின்றன. எழுத்து இலக்கியங்களுக்கு உள்ள வன்மை வாய்மொழி இலக்கியங்களுக்கு இல்லாதிருக்கலாம்; மாற்றம் பெறக்கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்கலாம். ஆனால் இவை புராணக் கதைகள் அல்ல; வரலாற்றுச் செய்திகளையும், இலக்கியச் சான்றுகளையும் தன்னுள் அடக்கிய பெட்டகங்கள். இவற்றையும் சான்றாதாரங்களாகக் கொண்டு ஆராய்கின்றபோது நிச்சயம் வரலாறுகள் திருத்தப்படலாம்.
அடிக்குறிப்பு
1.               சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, . 160.
2.   சோமலே, திருநெல்வேலி மாவட்டம், . 254.
3.   சிலப்பதிகாரம், 27வது காதை 127 – 130 வரிகள்.
4.   சிலப்பதிகாரம் 27வது காதை 130 – 138 வரிகள்.
5.   அருணாச்சலம் பிள்ளை, தகவலாளி, கொற்கை.
6.   பெரும்பாணாற்றுப்படை, 275 – 281 வரிகள்.

2 comments: