சங்க காலத்தில் மன்னனும்
புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்... அப்படி மன்னன் வாழாதநிலையில் அவனை
வழிப்படுத்தி அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய்
விளங்கிய புலவர்களே செய்துள்ளனர். மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தியுள்ளனர்.
அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப்பாடல் இது. பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார்
மகனார் நக்கீரர்.
மன்னனாகட்டும்...கல்லாத
மக்களாகட்டும்... இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள்
போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக்
கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், பலவற்றை இழக்க நேரிடும் என்று
எச்சரிக்கையும் செய்கின்றார் புலவர்.. புறநானூற்றின் 189 ஆவது பாடல். இதோ பாடல்..
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
கருத்துரை
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற
மன்னர்களுக்குப் பொதுவாக்காமல் தானே ஆட்சி செய்த ஒரு மன்னனாக இருந்தாலும் நடு இரவிலும்
பகலிலும் துயிலாது விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லா ஒருவனாக இருப்பினும்
உண்பது நாழி உணவே. உடுப்பது இரண்டு ஆடையே. பிற தேவைகள் இருவருக்கும் ஒன்றே. ஆதலால்,
செல்வத்தைப் பெற்ற பயன், பிறருக்குக் கொடுத்தலாகும். நான் பெற்ற செல்வத்தை நானே அனுபவிப்பேன்
என்றால் நமக்குக் கிடைக்காமல் போவன பலவாகும்.
மன்னனுக்கும் சாமானிய மனிதனுக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமென்றால் உணவிலும்
உடையிலும் காட்டலாம். உயர்ந்த ஆடை, உயர்தர
உணவு என்று! ஆனால், அதையும் நீ நாழி உணவுதான் உண்ணமுடியும். இரண்டு ஆடையைத்தான் உடுத்த
முடியும். இதற்குமேல் உணவை உண்ணவும் முடியாது, ஆடையை உடுக்கவும் முடியாது. இதைத் தவிர
மனிதனின் மற்ற உடல், மனத் தேவைகளும் உணர்ச்சிகளும் இருவருக்கும் ஒன்றுதானே? செல்வம் இருப்பதால் மட்டும் நீ வாழ்ந்தவனாகிவிட
மாட்டாய்; கொடுப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். கடைசியாக ஒரு வார்த்தையைச் சொல்லுகிறார்
பாருங்கள்...அப்படி யாராவது வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தால் வாழ்க்கையில் தவறவிடுவனவைதான்
அதிகம் என்கிறார். ‘சிலவே’ என்றுகூடச் சொல்லவில்லை, ‘பலவே’ என்கிறார் நக்கீரர். அப்படி
நினைப்பவர்களுக்கு நம் புலவர் கொடுக்கும் சாட்டைஅடி இது.
இதற்கெல்லாம் மேலாக, இதையெல்லாம் தமிழன் அன்றைக்கே
சிந்தித்தான் என்பதுதான் தமிழினத்தின் பெருமை; தமிழரின் தகமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக