தமிழ்த்தாய்க்கு என் முதல் வணக்கம்.
தனக்கு இடர் வருகின்றபோதெல்லாம் கலங்கி நிற்காமல் கால் பதித்து என்றும் நிமிர்ந்து நிற்கும் வல்லமை எம் தமிழ்மொழிக்கே உண்டு. அந்த வல்லமை இம்மண்ணில் பிறந்த அனைவருக்கும் வேண்டும் குறிப்பாக பெண்களுக்கு வேண்டும் என்பது என் அவா.
மூத்த மொழி, முதல் மொழி, கல் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி என்றெல்லாம் பெருமை பேசும் அம்மொழியிடம் இருந்த செல்வங்கள் எத்துணை? இருக்கின்ற செல்வங்கள் எவ்வளவு..?கொள்ளையடித்தாலும் குறையாத செல்வத்தை உடையது எம்மொழி.
தமிழ்மொழியின் இலக்கணமாகட்டும், இலக்கியமாகட்டும், வாழ்க்கைப் பேருண்மைகள் ஆகட்டும், வாழச் சொன்ன மொழி எம் மொழி, வாழ்வித்துக் கொண்டிருக்கும் மொழி, வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி.
தமிழ்க் கடலைக் கடப்பதற்கு இந்தப் பிறவி போதாது. இன்னொரு பிறவி எடுத்து வரவேண்டும். இவையெல்லாம் வெற்று வார்த்தைகளல்ல. என் உணர்வோடு கலந்த வார்த்தைகள்.
எம் மொழி பேசும் தமிழ் இனம் உணவு, உடை, வாழ்கின்ற வாழ்வியல் முறை அனைத்திலும் உலகிற்கோர் சிறந்த சான்று. இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலம் தொடர்ந்து வரும் பண்பாட்டு நிலை இது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று எல்லை கடந்து சிந்திக்கின்ற சிந்தனை உடையது தமிழினம். அதனால்தான் உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. நாம் வியக்கிறோமா… அது வேறு விஷயம்.
அடுத்தது தமிழ்நாடு. இந்த நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை…அதுதான் மலை நிலம், காட்டுப் பகுதி, வளமான வயல்வெளி, கடல், எதுவுமற்ற கட்டாந்தரை என்று எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்நிலத்தில் வாழும் உயிர்களுக்குத் தேவையான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் எல்லா வளங்களும் இங்குண்டு. ‘மாடு‘ செல்வம் என்றது இந்தத் தமிழ் நிலம். நில வளம் செழிக்க, செல்வமாகப் போற்றிய மாட்டை வைத்தே தன் இனம் செழிக்க, சிறந்த காளைகளை(ஆண் மகனை) உருவாக்கியது இம்மண். இந்த நாட்டின் தட்பவெப்பம், ஆறு, கடல், மலை அனைத்தும் அழகானவை. என்றாவது இரசித்தோமா? செல்வத்தைச் சீரழிக்கும் ஊதாரி குழந்தைகள் போல நாமும் நம் தமிழ் மண்ணின் செல்வங்களை, செல்வம் என்று நினையாது வீணடிக்கிறோமோ…?
உலக நாட்டு அறிஞர்கள், இந்த மண்ணில் கால் பதிப்பதையே பெருமையாக நினைக்கிறார்கள். நாம்…? விடை தேடி அலைகின்றேன்.
ஒருமுறை வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் ”நீ இந்தத் தமிழ் இனத்திலே பிறந்ததற்குப் பெருமைப்படவேண்டும். கருப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சியடையணும்.இதுதான் உன்னுடைய சிறந்த அடையாளம்” என்று சொன்னார் என்று கூறினார்கள்.
நாம் உணர்ந்து கொள்வது எப்போது?
தொடரும் என் வினாக்கள்!
தொடருங்கள் என்னை!
சந்திப்போம், சிந்திப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக