வெள்ளி, 9 நவம்பர், 2012

நெடுநல்வாடை - தொகுப்புரை


நெடுநல்வாடை - தொகுப்புரை
மழையும் கோவலரும்
பொய்த்தலில்லாத வானம், வையகம் குளிருமாறு வலமாகச் சூழ்ந்து புது மழையினைப் பொழிந்தது.  அம்மழைவெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர், தம் பசு, எருமை, ஆடு போன்ற நிரைக் கூட்டங்களை வேற்றிடத்திற்கு ஓட்டிச் சென்றனர்; புதிய இடம் என்பதால் வருத்தமுற்றனர்.  கோவலர் கழுத்தில் அணிந்துள்ள செங்காந்தள் மலராலான மாலையில் இருந்து வீழும் மழைத்துளிகள், அவர்கள் மேனியில் படுதலால் பெரும்குளிரால் வாட்டமுற்றனர்.  மேனியின் குளிரைத் தணிவிக்க, பலரும் கூடி கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றினர் எனினும் இடையர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்குமாறு மழைக்காலத்துக் குளிரின் தன்மை இருந்தது.

கூதிர்காலத்தின் தன்மை
                விலங்குகள் மேய்த்தலை மறந்தன; குரங்குகள் குளிரால் கூனிப் போயின; பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து  கீழே விழுந்தன; கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் மாடுகள்,  பால் குடிக்க வரும் கன்றுகளைத் தவிர்த்துக் கோபத்தோடு உதைத்துத் தள்ளின.  இவ்வாறாகக் குன்றையே குளிர்விப்பது போல் குளிர்க் காலத்து நள்ளிரவு இருந்தது.
மழைக்காலத்தின் வளமை
                தொன்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள்தொறும் மலர்ந்திருந்தன.  பசுங்கால்களையும், மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கரு நிற வண்டல் மண் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன.  மழை நீரின் வேகம் குறைகின்றபோது, அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை  எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ, அங்கே நின்று கொண்டு கவர்ந்தன.  மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டே இருந்தன.
                அகன்ற வயல்களில் நிறைவாக மழைப் பெய்ததினால், செழித்து வளர்ந்த நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன.  நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல்களில் காய்த்திருக்கும் பாக்குப் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி, பருத்து பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின.  மலையுச்சியில் பல்வேறு மலர்கள் பூத்திருக்கும் சோலையில் உள்ள மரக் கிளைகளின் குருத்துகளிள்ல இருந்து மழைத்துளிகள் இடையாறாது சொட்டிக் கொண்டேயிருந்தன.
தெருக்களில் சுற்றித் திரியும் முழுவலி மாக்கள்
                மாடங்கள் உயர்ந்து விளங்கும் வளப்பமான மூதூரில் ஆறு கிடப்பது போல அகன்ற நீண்ட தெருக்கள்.  அத்தெருக்களில் தழை மாலையணிந்து, பருத்த அழகிய வலிய தோள்களும் முறுக்குண்ட வலிமையான உடம்பும் பெற்ற மக்கள், கள்ளினை அதிகமாகக் குடித்து, மிகுந்த மகிழ்ச்சியோடு மழைத்துளி தம் மேனியில் விழுவதையும் பொருட்டுத்தாமல், பகல் பொழுது கழிந்த பிறகும், தோளில் இரு பக்கமும் தொங்குகின்ற ஆடையோடு (துண்டு) விரும்பிய இடங்களிலெல்லாம் சுற்றித் திரிந்தனர்.
மகளிரின் மாலைக்கால வழிபாடு
                வெண்மையான சங்கினால் செய்யப்பட்ட கைவளை அணிந்த முன்கையினை உடைய பெண்கள், மூங்கில் போன்ற தோளும், மென்மையான மேனியும் உடையர்; முத்துப் போன்ற பல் உடையர்; காதணிக்குப் பொருத்தமான கண்களைப் பெற்றிருப்பவர் ; பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடைர்; இப்பெண்கள் பூந்தட்டில் வைத்திருந்த மலரும் பருவத்துப் பிச்சியின் அரும்புகள் இதழ்  விரிந்தன.  பிச்சியின் மலர்ச்சியைக் கண்டு பெண்கள் மாலைக் காலம் வந்து விட்டதை அறிந்தனர்.  இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைத்தொழுது தெய்வத்தை வழிபட்டனர்.  இவ்வாறு வளமான அங்காடித் தெருவில் மாலைக்காலம் இருந்தது.
குளிர்கால நிகழ்வுகள்
புறாவின் நிலை
                வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தான் இன்புறும் பெண் புறாக்களோடு பொது இடங்களுக்குச் சென்று இரையைத் தேடி உண்ணவில்லை; எது பகல், எது இரவு என்று அறியாது செயலற்று கொடுங்கையைத் தாங்கும் பலகையிலே நின்றிருந்தன; ஒரே இடத்தில் நிற்பதால் உண்டான கால் வலியைப் போக்கக் காலை மாற்றி மாற்றி வைத்தன.
மகளிர் நிலை
                மகளில் அடர்ந்த கரிய கூந்தலில் பூமாலைகளைச் சூடார்; சிலவாகிய மலர்களையே சூடினர்.  குளிர்ச்சியைத் தரும் வாசனை மரத்தின் விறகில் நெருப்பை உண்டாக்கி, கரிய மர வைரமாகிய அகிலொடு, வெண்மையான அயிரையும் சேர்த்துப் புகைத்தனர்.
இயங்காத விசிறியும் தாழிட்ட சாளரமும்
                கை வேலைப்பாடமைய அழகுபெற ருவாக்கப்பட்ட சிவந்த நிற விசிறியும் சிலந்தி நூல் பின்னப்பட்ட நிலையில் ஆணியில் தொங்கின.  வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்து விளங்கும் மேல்மாடத்தில் தென்றல் வரும் பலகணியில் உலவுதலைத் தவிர்த்தனர்; பலகணியின் கதவுகளும் தாழிட்டுக் கிடந்தன.
விரும்பா தண்ணீர், விரும்பிய நெருப்பு
                கல்லென்ற ஓசையோடு சிறு தூறலாக மழைத்துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயினையுடைய குடத்திலுள்ள குளிர்ந்த நீரைப் பருகவில்லை; அகன்ற வாயினையுடைய தூபமூட்டியில் நெருப்பின் வெம்மையை மிகுதியும் துய்த்தனர்.
திரிந்த யாழினைச் சீர்செய்யும் பெண்டிர்
                குளிர்ச்சியால் மாறுபட்ட இனிய குரலினை எழுப்பும் யாழினை, ஆடல் தொழில் செய்யும் மகளிர் தம் மார்பகத்தின் வெப்பத்தில் தடவி பாடலை இசைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றினார்.
காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்
கணவரைப் பிரிந்த மகளிர் தனியே வருந்த, மழை மிகுதியாகி பனிக்காற்றும் நிலைபெற்றிருந்தது.
மன்னனின் மனை உருவாக்கப்பட்டுள்ள முறைமை
விரிந்த  கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தையுடைய சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழும் நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, மனையின் பகுதிகள் அமைய வேண்டிய திசைகளைத் தெரிந்து, அத்திசைக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மணை.
அரண்மனை வாயில்
அரண்மனையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி உயர்ந்த நிலையினையுடைய மதிலை மைத்தனர்.  அம்மதில் அமைக்கப்பட்ட வாயில் நிலையோடு, பருத்த இரும்பால் இணைக்கப்பட்டிருந்த செம்மையான அரக்கு வண்ணம் பூசிய இரண்டாக அமைந்துள்ள கதவுகளைப் பொருத்தினர்.  அவை நிலையோடு இணைந்து இடைவெளியின்றி நன்கு விளங்கின.
மதிலின் கதவுகள் உத்திரம் என்ற விண்மீனின் (நாள் மீன்) பெயரைக் கொண்ட வலிமை பொருந்திய சிறந்த மரத்தால் செய்யப்பட்டிருந்தன.  அக்கதவுகளில் அலரும் பருவத்து குவளை மலரின் அரும்பு, இதழ் விரித்ததைப் போன்ற அமைப்புடன் புதுமை தோன்ற செய்யப்பட்ட கைப்பிடிகளை நன்கு பொருந்துமாறு பதித்திருந்தனர்.  இரண்டாக அமைந்திருந்த கதவுகள், கைத்தொழில் வல்ல தச்சன் நெருக்கியதால் உள் இடைவெளி இன்றி அமைந்திருந்தன.
வாயிலின் உயர்ந்த நிலையில் வெண் சிறு கடுகினை அரைத்துப் பூசி, நெய் தடவியிருந்தனர்.  வெற்றிக் கொடியினைத் தாங்கி வரும் யானைகள் அரண்மனைக்குள் நுழையும் வாயில், மலைக்குள் புகுவது போல உயர்ந்த நிலையினைப் பெற்று அரண்மனையின் வாயில் விளங்கியது.
அரண்மனையின் முற்றம், முன் வாயில்
                புது மணல் பரப்பப்பட்ட அரண்மனையின் முற்றம், திருமகள் நிலைபெற்ற தன்மையினை உடையது.  குற்றமற்ற சிறப்பினைப் பெற்றது ; செல்வம் நிறைந்தது.
                அரண்மனை வாயிலின் முன்பகுதி, நீண்ட மயிரினையுடைய கவரிமானின் வெண்நிற ஏறு, குறுகிய கால்களையுடைய அன்னத்தோடு தாவித் திரியும் அழகினைப் பெற்றது.
அரண்மனையில் எழும் ஓசைகள்
                பந்தியிலே (குதிரைகளைக் கட்டுமிடம்) நிற்பதற்கு வெறுத்த குதிரைகள் தனிமைத் துயரோடு குரலை எழுப்பின.  மகரமீனின் வாய் போலப் பிளந்த வாயினையுடைய நீர் விழும் குழாயிலிருந்து மழை நீர் விழுகின்ற ஓசை, அருவி வீழும் ஓசை போன்று ஒலித்தன.
                ஊது கொம்பின் இசையோ? என்று மயங்கும்  வகையில் மயில் அகவும் ஒலியும் கேட்க, அரண்மனையில் எழுந்த பல்வேறு ஆரவார ஓசைகளும், மலையிலிருந்து எழும் ஆரவாரம் போல் இருந்தது.
அந்தப்புரத்தின் அமைப்பு
அரண்மனையில் அமைந்துள்ள அந்தப்புரத்தில் யவனர்களால் உருவாக்கப்பெற்ற பாவை விளக்கில் அகல் நிறையுமாறு நெய்யினை ஊற்றினர்: பருத்த திரிகளைக் கொளுத்தினர்; பொன் நிறத்தோடு மேல் நோக்கி எரியும் விளக்கில், நெய் குறையும் போதெல்லாம், நெய் வார்த்துத் திரியைத் தூண்டி நன்கு எரியுமாறு செய்தனர்.  இப்பாவை விளக்கின் ஒளி, அரண்மனையின் பல இடங்களிலும் பரவியிருந்த இருளினைப் போக்கியது.  இத்தகு அந்தப்புரம் மன்னனை அல்லாது வேறு ஆடவர் செல்ல முடியாத காவலை உடையது; குறிப்பிட்ட எல்லை உடையது.
அந்தபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
                அந்தப்புரம் மலைகளைப் பார்ப்பது போன்ற உயர்ந்த தோற்றமுடையதாய் விளங்கியது.  அங்கு மலைகளைச் சேர்ந்து வாவில் கிடப்பது போலப் பலநிறக் கொடிகளும் அசைந்தன.  அந்தப்புரத்தின் பல இடங்களில் வெள்ளி போன்ற சாந்தினைப் பூசி இருந்தனர்.  நீலமணியைக் காண்பது போலக் கரிய திரண்ட வலிமையான தூண்களும் காணப்பட்டன.  செம்பினால் உருவாக்கப்பட்டது போல் செய்யப்பட்ட நெடிய சுவரிலே, பல வடிவத்திலான பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல் போன்ற காட்சியும் தீட்டப்பட்டிருந்தது.  இவ்வாறு காண்பதற்கு இனிய நல்ல இல்லமாகக் கரு தங்கும் அறை (கரு அறை) என்று பெயர் பெற்ற அந்தப்புரம் காட்சியளித்தது.
தலைவி படுத்திருக்கும் பாண்டில்எனும் வட்டக்கட்டில்
நாற்பது ஆண்டுகள் நிரம்பப் பெற்றதும், ‘முரசுஎன்று வியக்கும்படியான கால்களும், போரில் சிறந்த யானை என்று புகழப்பட்ட தகுதியும், மிக்க அழகும், வரிகளையுடைய நெற்றியும் பெற்று போரில் இறந்த யானையின் தாமே வீழ்ந்த தந்தங்களைக் குறைத்துச் சீர்படுத்தி, அழகும் செம்மையும் தோன்ற தொழில் வல்ல தச்சனால் கூர்மையான உளி கொண்டு செதுக்கிய இரண்டு இலை வடிவம் இடையே விளங்குமாறு உருவாக்கப்பட்டிருந்தது தலைவயின் கட்டில்.
சூல் முதிர்ந்த அசைந்த இயல்பினையுடைய பெண்களின் பருத்த முலை (மார்பு) போன்று பக்கங்களில் திரண்டிருக்கும் குடத்தையுடைதாய் கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இயற்றப்பட்டிருந்தது.
பூண்டின் வலிமையான முதற்பகுதி போல், கட்டிற்காலின் அடிப்பகுதிப் பொருத்தமுடன் விளங்கியது.  இவ்வாறு அந்தப்புரத்தில் அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட பெரும் பெயர் பெற்றப் பாண்டில்எனும் வட்டக் கட்டில் அமைந்திருந்தது.
கட்டிலில் செய்யப்பட்டிருந்த ஒப்பனை
                நுண்ணிய நூலால் அழகாகத் தொடுக்கப்பட்ட முத்து மாலைகளை மூட்டுவாய் நன்கு பொருந்த கட்டிலோடு சேர்த்துக் கட்டியிருந்தனர்.  அவை கட்டிலுக்குச் சாளரம் போல் அமைந்திருந்தன.
                புலியின் வரியினை ஒத்த நிறமுடைய பூக்கள் நிறைந்த தாம்பாளத்தைப் (தட்டு) போன்று, குத்துதல் தொழில் அமைய வடிவமைக்கப்பட்டிருந்த தகடுகளால், கட்டிலின் மேலிடத்தை மறைத்திருந்தனர்.
                குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்கற்றைகளை விரவி உருவாக்கிய கட்டிலின் விரிப்பில், சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர். அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லை மலரோடு பல்வேறு மலர்களையும் பரப்பிய மென்மனையான போர்வையை விரித்திருந்தனர்.  இப்படுக்கைச் சிறப்புறக் காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையானச் சிறகினை இட்டுச் செய்த இரண்டாக இருக்கின்ற மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பியிருந்தனர்.  அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர்.  படுக்கையின் மீது மலரின் இதழ்கள் போல் அமைந்திருந்த கஞ்சியிடப்பட்டு துவைத்து மடித்த ஆடையினை விரித்திருந்தனர். 
படுக்கையில் இருந்த தலைவியின் நிலை
                முத்து மாலை தாங்கிய பெருத்த முலையினைக் கொண்ட மார்பில், பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல் தாழ்ந்து கிடக்க, நல்ல நெற்றியில் வறண்ட சில மெல்லிய மயிர் புரள, போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.  அவள் நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் (காதணி) களைந்தமையால் குழையின்றி தாழ்ந்து தொங்கும் இயல்பினையுடைய காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தி யிட்டிருந்தாள்; பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த மயிர் ஒழுங்குபட அமைந்த முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு, காப்பு நூலும் கட்டியிருந்தாள்; வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை (நெளி என்னும் மோதிரம்) அணிந்த சிவந்த விரலில் செந்நிறமுடைய (சிறிய) மோதிரத்தைச் செருகியிருந்தாள்; பூ வேலைப்பாடமைய உருவாக்கப்பட்டப் பட்டாடை உடுதியிருந்த உயர்ந்த ளைவினையுடைய அல்குலில், நூலால் நெய்யப்பட்ட மாசு படிந்த ஆடையினை உடுத்தியிருந்தாள்.  இவ்வாறு ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போலத் தவையியும் ஒப்பனை எதுவுமின்றி கட்டிலில் இருந்தாள்.
தலைவியின் அடி வருடும் தோழியர்
                தலைவியின் அடி வருடும் பெண்கள், தளிர் போன்ற மேனியுடையர்; அவ்வுடம்பில் தேமலைப் பெற்றிருப்பவர்; மூங்கில் போன்ற தோளினை உடையர்; தாமரையின் மொட்டு போன்ற முலையினைக் கச்சினால் இறுகக் கட்டியிருப்பவர்; வளைந்து தளர்ந்த இடையினையும் மென்மையான இயல்பினையும் உடையவர்.
தலைவியைத் தேற்றும் செவிலித்தாயர்
                நரை கலந்திருக்கும் மணம் வீசும் மெல்லிய கூந்தலையும் சிவந்த முகத்தையும் உடைய செவிலியர் ஒன்று கூடி, தலைவியின் பிரிவாற்றாமையைத் தணிக்கும் வகையில், குறைவாகப் பேச வேண்டிய இடத்தில் குறைவாகவும், விளக்கமாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நீட்டியும் அறிவுரைகள் பலவும்  கூறி, தலைவியின் துயரத்தைத் தணிவிக்க முயற்சித்தனர்.  உனக்கு இனிய துணையாய் அமைந்த தலைவர் இப்பொழுதே வருவார்என்று தலைவியின் மனம் விரும்பும் வகையிலும் இனிய மொழிகளைக் கூறினர்.
தேறாத தலைவி
                செவிலியரின் சொற்களைக் கேட்டும் மனம்  அமைதியடையாமல் மிகவும் கலங்கினாள் தலைவி.  அவள் அமர்ந்திருந்த கட்டிலின் கால்கள் நுண்ணிதாகச் சாதிலிங்கம் பூசப்பட்டிருந்தது.  அக்கால்கள் பெண்களின் பால் சுரக்காத மார்பு போன்று சிறிய குடங்களைக் கொண்டிருந்தன.  கால்கள் கட்டிலோடு இணைக்கப்பட்டு, கட்டிலின் மேல் விதானத்தில் திரைச்சீலை கட்டப்பட்டிருந்தது.  இதில் திங்களோடு உறையும் உரோகிணியின் சித்திரம் வரையப்பட்டிருந்தது.  அதனைக் கண்ட தலைவி தானும் உரோகிணி போல் கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சு விட்டாள்.  அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி, சில துளி கண்ணீரை விரலால் தெறித்தத் தனிமைத் துயரில் வருந்தினாள்.
தலைவியின் துயர்தீர தெய்வத்தை வேண்டல்
                அன்பு மிகுந்த தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில் தலைவனுக்குப் போரில் வெற்றியைத் தந்து, இப்பொழுதே முடித்துத் தருக.  எம் விருப்பத்தைக் கேட்பாயாகஎன்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர் செவிலியர். 
அரசனின் நிலை
                ஒளி வீசும் முகபடாம் அணிந்த போர்த் தொழில் பழகிய யானையின் நீண்டு திரண்ட கையானது நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச் செலைச் செய்தவர் வீரர்கள்.  அவ்வீரர்கள் போரிலே பட்ட விழுப்புண்களைக் காண்பதற்காகப் பாசறையிருந்து வெளியே சென்றான் தலைவன்.  அங்கே அகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம், அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்தன.  அவ்வொளியில் வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய காம்பினையுடைய வேலினை ஏந்தியவாறு வீரனொருவன் முன்னே சென்று புண்பட்ட வீரர்களை மன்னனுக்குக் காட்டிச் சென்றான்.
                பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளைப் புத்தே இட்டப் பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, சேணம் களையாத பாய்ந்து செல்லும் செருக்குடைய குதிரைகளும் தன்மேல் விழுந்த மழைத் துளிகளைச் சிதறின.  தலைவனோ தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை இடக்கையால் எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான்.  வலக்கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வீரனின் தோள் மேலே வைத்துக் கொண்டான்.  போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான்.  மன்னன் மேல் மழைத்துளி படாதவாறு, முத்து மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை மறைத்து நின்றது.  இவ்வாறு நள்ளென்ற இரவுப் பொழுதிலும் மன்னன் துயில் கொள்ளாது சில வீரர்களோடு சென்று புண்பட்ட வீரர்களைப் பார்த்து வந்தான்.  மன்னனின் பலரோடு முரண்பட்ட இப்பாசறைத் தொழில் இனிதே இப்பொழுதே முடிய வேண்டும்என்று முன்னதில் இருந்து முடிவினைப் பெற வைத்துப் பாட்டை முடிக்கின்றார் நக்கீரர்.