வெள்ளி, 9 நவம்பர், 2012

நெடுநல்வாடை குறித்து...


நெடுநல்வாடை
               
பத்துப்பாட்டில்  ஏழாவது  பாட்டாகிய  நெடுநல்வாடை, ‘மருவினிய கோல நெடுநல்வாடைஎன்று, பத்துப்பாட்டை விளக்கும் செய்யுளில் புகழ்ந்துரைக்கப்பட்ட  பெருமை  பெற்றது.  188  அடிகளைக்  கொண்டது.  மதுரைக் கணக்காயனார் மகனார்  நக்கீரனார் எனும்  நல்லிசைப் புலவரால்  யாக்கப்பட்டது.  முல்லைத்  திணையைப்  பாடும்  இனிய அகப்பாட்டு.
                தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயர்தீர தலைவன் பாசறைத் தொழிலை முடித்துக் கொண்டு விரைவில் வர வேண்டும் என்று தெய்வத்தை வேண்டும் செவிலியின் குரலே நெடுநல்வாடை.
                தலைவியின் தனிமைத்துயர் தணிய வேண்டும்; தலைவனின் போர்த் தொழில் முடிய வேண்டும் என்பதே செவிலியின் வேண்டுதல் என்றாலும், தன்னைச் சுற்றி இயங்கும் இயற்கை வனப்பைக், கலைநயம் மிக்க அரண்மனையின் செயற்கையழகைத், தலைவி வீற்றிருக்கும் கட்டிலின் பொலிவைச் செவிலி இயம்புவதாக நக்கீரனார் சொல்லும் பாங்கே இனிமை பயப்பதாம்.  மழைக்காலத்துக் குளிரில் வாடையின் தண்மையை உணர்ந்த நக்கீரர்,  இசையுறத் தந்த தீம்சுவைப் பாட்டே நெடுநல்வாடை.
                வாடைக்காலம், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு நெடுவாடையாகவும், தலைவியைப் பிரிந்து போர் வினையாற்றச் சென்றுள்ள தலைவனுக்கு நல்வாடையாகவும் இருந்தது.  ஆதலின் இப்பாட்டு நெடுநல்வாடை ஆயிற்று என்பர்.  வாடைக்காலத்திற்கு நெடு, நல் என்ற இரு அடைமொழிகளைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கும் அழகே சிறப்புடையது.  இவ்வாடைக்காலம், பிரிந்திருக்கும் தலைவனுக்கும் தலைவிக்கும் அன்பின் ஆழத்தினைப் புரிய வைக்கும் காலமும்கூட.  கூடியிருக்கும் காலங்களைவிட பிரிந்திருக்கும் காலங்களில்தான் அன்பின் நிலைப்பாட்டை இருவரும் உணரமுடியும்.  அவ்வகையில் நக்கீரனாரும், இவ்வாடைக்காலம் நீண்டதாக  இருந்தாலும் நல்வாடையே என்ற பொருளில்தான் நெடுநல்வாடைஎன்று அழைத்தனரோ? என்ற எண்ணமும் எழுகிறது.  இருத்தலின் சிறப்பே இல்லறத்தின் சிறப்பு எனப் பகரும் முல்லை சான்ற கற்பின்அடிநாதமும் அது தானே? முல்லைத் திணைக்  காதலைச் சொல்ல வந்த  நக்கீரர், பாடல் தலைப்பிலேயேத் தண்ணிய காதலைப் பகருவது இயல்புதானே? தலைவியின் பொறுமையும், தலைவனின் கடமையும் இணைந்திருக்கும் முல்லை நிலத்துக் கற்பு வாழ்வைக் காட்டும் அழகோவியமே நெடுநல்வாடை எனின் மறுத்தலும் இயலுமோ?
நக்கீரன்
                நெடுநல்வாடையைப் படியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.  இதே அடைமொழிப் பெயரோடு குறுந்தொகையில் (143) ஒரு பாடலும், புறநானூற்றில் (56, 189) இரண்டு பாடல்களையும் தந்தவர்.  கீரன் என்பது இவரது இயற்பெயராக இருத்தல் கூடும்.  சங்கப்புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் என்ற எழுத்தைச் சேர்த்து, நக்கண்ணையார், நச்செள்ளையார், நப்பூதனார் என்று எழுதும் முறையினைக் காணலாம்.  அவ்வகையில் கீரனொடு வினை இணைத்து, ஆர் உயர்வு பற்றிச் சேர்க்கப்பட்டு, நக்கீரனார் ஆனது.  இவரின் தந்தை மதுரை கணக்காயனார் என்பதால், மதுரையில் ஆசிரியர் தொழிலில் இருந்தவர் என்பது தெரிய வருகிறது.  (கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்.  நாலடி. 314.  என்பதால் கணக்காயர் என்பது ஆசிரியரைக் குறிக்கிறது என்பதைப் பெறமுடிகிறது) நக்கீரரின் தந்தையாகிய மதுரைக் கணக்காயனார் பாடியதாக அகநானூற்றில் (338) ஒரு பாடலும் காணக்கிடைக்கின்றது.  இதன்வழி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், புலமையாளர் பெற்ற புதல்வர் என்பது புலப்படுகிறது.
                தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் பாடியவராகிய மதுரை நக்கீரர் (அகம். 36) ஒருவரும் உளர்; பசும்பூண் பாண்டியனைப் பாடிய நக்கீரரும் (அகம். 57, 126, 141, 295, 227, 253, 290, 340, 346, 369, நற்றிணை. 86, 197, 258, 340, 353, 367) உளர்; குறுந்தொகை.  73ஆம் பாடலையும் நற்றிணை 31ஆம் பாடலையும், அகநானூறு 120, 249, 310, 389ஆம் பாடல்களை பாடிய நக்கீரனாரும் உளர்; மதுரை நக்கீரனார் என்பாரும் (அகம். 78) உளர்; ஆதலின், தான் வாழ்ந்த காலத்தை ஒட்டியும், தனக்கு முன்பும் வாழ்ந்திருந்த நக்கீரர்களை நினைவில் நிறுத்தியும், அவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்றனர் போலும்! ஒரு துறையில் இருப்போர் இருவரது பெயர் ஒன்று போல் இருக்குமானால், ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்ட, தந்தையார் பெயரைப் பெயருக்குப் பின்னால் சேர்த்துச் சொல்லுவது தானே இன்றும் வழக்கமாக உள்ளது.  அதைத்தான் நக்கீரனாரும் முன்னே சேர்த்து மொழிந்தனர் போலும்!
நெடுநல்வாடை  - காலம்
                நெடுநல்வாடையிலும், முல்லைப்பாட்டிலும் வருகின்ற செய்திகளைக் கொண்டு (யவனர் மற்றும் நெல்லும் மலரும் தூவி கை தொழுதல்) இரு நூல்களும் சம காலத்திலோ, முன் பின்னாகவோ தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம் எழுகிறது.  பாடல் அமைப்பு முறையும் ஒத்த தன்மையினதாகவே உள்ளது.
                நெடுநல்வாடை பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் தந்தை, பசும்பூண் செழியனைப் (அகம். 338) பாடியுள்ளார்.  நக்கீரர் என்ற பெயரிலே உள்ள புலவரும் பசும்பூண் செழியனைப் பாடியுள்ளார் (அகம். 253; 5; நற். 358. 10). இப்புலவர் கரிகாலனையும் (அகம். 141. 22) தம் பாடலில் குறித்துள்ளார்.  இப்பசும்பூண் செழியனைப் பரணரும் (அகம். 116, 162) இரு பாடல்களில் பாடியுள்ளார்.  பரணர், கரிகாலனையும் கரிகாலனின் தந்தையையும் பாடியவர்.  சேரன் செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தில் புகழ்ந்தவர்.  கரிகாலனும் சேரனும் செங்குட்டுவனும் வாழ்ந்த காலம் கி.பி. 56 முதல் - 135 வரை என்றுரைப்பர் அறிஞர்.  அப்படியாயின், பசுமபூண் பாண்டியனைப் பாடிய நக்கீரரினும், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் வேறுபட்டார் என்பதும், நக்கீரரின் காலத்திற்குப் பின் வந்தவர், வாழ்ந்தவர் என்றுமே எடுத்துக் கொள்ள இடமேற்படுகிறது.  அதேசமயம் கி.பி. 135ஆம் ஆண்டை ஒட்டியதாகவே மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் காலமும் இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. 
                கரிகாலன் காலத்திலோ, சேரன் செங்குட்டுவன் காலத்திலோ, தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் இல்லை என்பது இலக்கியம் கண்ட உண்மை, என்ற கருத்தும் இவண் நினையத்தக்கது.  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்  கி.பி 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 210) இருந்தவன் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.  எவ்வாறாயினும் இம்மன்னனைப் பாடிய மதுரை நக்கீரர், நெடுநல்வாடை பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் அல்லர் என்பது தெளிவாகிறது என்று எண்ணலாம்.
நெடுநல்வாடை  - புறமா?
                நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட’ (176 - 177)  என்ற தொடரினைக் கொண்டு வேம்புஎன்று பாண்டியனின் அடையாள மாலைச் சுட்டப்படுவதால் தலைவன் இன்னான் என்று தெரிந்ததால், இப்பாட்டு புறம் தான் என்று புகலுவர்.  சுட்டி ஒருவர் பெயர் கொளாத் தன்மையே அகம்.  அந்த அகவிலக்கிய மரபு இப்பாட்டில் இல்லாது போயிற்று என்று இயம்புவர்.  பாட்டின் தலைவனாக இருக்கும் மன்னன் சென்னியில் சூடிய மாலையா எனின் அஃதில்லை; மார்பில் அணிந்த  தாராவெனின் அதுவுமில்லை; எந்த இடத்திலும் எந்தப் பாண்டியன் என்ற குறிப்பையும் கொடுக்கவில்லை.  மன்னனோடு வந்த வீரனின் கையிலே வைத்திருந்த வேலின் நுனியிலே வேம்பு இருந்தது என்று குறிப்பிட்டதைக் கொண்டு, இந்நூல் அகமல்ல என்று மறுத்துரைக்கலாமா?
                தமிழகம்  முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட பாண்டியர்கள் தாம் வணங்கிய தாய்த் தெய்வத்திற்கு நோய்க்குக் காப்பாகிய வேம்பை உரியதாக்கி, அதனையே தம் அடையாளமாகவும் கொண்டிருந்தனர் என்றே கருதலாம்.  அதன் தொடர்ச்சியே இன்று வரை வேம்பு, தாய்த் தெய்வ வழிபாட்டில் முக்கிய இடத்தினைப் பெற்று வருகிறது.  அச்சத்தின் காரணமாகவே நாம் தெய்வங்களை வழிபடத் தொடங்கினோம்.  தாயே நமக்கு எல்லா வகையிலும் நம்பிக்கைக்கு உரியவள் என்பதால் அவளையே தெய்வமாக்கினோம்.  அந்த வகையில்  அவளுக்குரிய வேப்ப இலை, தழை அச்சத்தை ஓட்டும் ஆயுதமாகவும் பயன்பட்டது.  நெடுநல்வாடையிலும் அதுதானே நடந்துள்ளது!  போரிலே விழுப்புண்பட்டு இறந்து கிடக்கின்ற வீரர்களைப் பார்க்கக் களத்திற்குச் செல்கின்றான் மன்னனும், வீரனும். இரவு நேரம்.... பிணங்கள் இருக்கின்ற இடத்திலே பேய்கள் உலவும் என்பது நம் பண்டையோர் நம்பிக்கை.  தம் வினையாற்றப் பேய்களின் இடையூறு இல்லாதிருக்க வேலின் நுனியிலே வேம்பினைக் கட்டியிருக்கிறான் படைவீரன்.  சங்ககால வாழ்வியலின் எச்சங்களாக இன்றும் கிராமபுறங்களில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற செய்திகளும் காட்சிகளும் இவை தானே? அப்படியிருக்க நெடுநல்வாடையைப் புறம் என்று சொல்வது பொருந்துமா? என்பதை மறு மதிப்பீடு செய்தலே நன்று.
                போரிலே புண்பட்ட வீரர்கள் இருக்கின்ற இடத்தில் பேய்கள் இரத்த வாடைக்கு வராமல் இருக்க, வீட்டு வாசலில் வேப்பந் தழையைச் செருகி வைத்துப் பாதுகாத்தச் செய்தியையும் சங்க இலக்கியங்களே நமக்குத் தருகின்றன.
தீம்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்இயம் கறங்க,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ
காக்கம் வம்மோ - காதல் அம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே.              (புறம். 28)
என்றும்,
வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி  பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே (புறம். 296. 1 - 3)
என்று விழுப்புண்பட்டு வந்த வீரர்களைப் பாதுகாக்க வீட்டிலுள்ளோர், வேப்ப மரத்தின் தழையை ஒடித்து வந்து மனையில் செருகி வைத்தனர்; ஐயவி புகைத்தனர்; மை இட்டனர்; பல வாத்தியங்களை முழக்கினர்; மணி அடித்தனர்; காஞ்சிப் பண்ணைப் பாடினர்; இவ்வாறெல்லாம் வீரரைப் பேய் தீண்டாது பாதுகாத்தனர்.  தமிழகத்து நாட்டுப்புற மக்களின் நடைமுறை வாழ்வும் இதுதானே?
                வேல்என்ற சொல்லே வேம்பின் அடியொற்றி வந்தது என்று கருதலாம்.  ஆலும்வேலும்இங்கு நோக்கத்தக்கது.  வேம்பின் இலை போன்ற மேல்பகுதி கொண்ட ஆயுதமே வேல் எனப்பட்டது.  வேம்பின் இலை, தழை, மனிதனின் நோய்க்குக் காப்பாக, பேய்க்குக் காப்பாக பயன்பட்டது போன்று புற லகில் போரிடவும், வேம்பின் இலை வடிவ ஆயுதத்தையே பயன்படுத்தினர் தமிழர்.  இதனால் தான் பேய் ஓட்டும் வெறியாட்டிற்கும் வேல் கொண்ட வேலனையே தலைவனாக்கினர் போலும்!
பெரும்பாணாற்றுப்படை,
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த (58 - 59)
என்ற வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், உமணப் பெண் வழிச் செல்லுகையில் தம் குழந்தையின் இடையிலே வேப்பிலைச் செருகியிருந்தாள் என்பர்.  குழந்தையோ அல்லது உமணரோ வழிச் செல்லுவோர், வழியில் பேயின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள வேப்பந்தழையைத் தம்மோடு கொண்டு சென்றனர் என்ற செய்தியைப் பெற முடிகிறது.  இன்றும் தென் தமிழ்நாட்டில் இறந்த குழந்தைகளைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது வேப்பந்தழையால் மூடி எடுத்துச் செல்வர்.  குழந்தை தின்னும் பேய்களிடமிருந்து காத்தல் பொருட்டு வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்று கருதலாம்.  அதே போலத் தென்தமிழ் நாட்டில் பூப்படைந்த பெண்களும், கருவுற்ற பெண்களும், தமக்குக் காப்பாக வெளியில் செல்லும்போது வேப்பிலையைக் கொண்டு செல்வது உண்டு.  தமிழ் மக்களிடம் சங்க காலம் தொட்டு இன்று வரை தொடரும் புரையோடிப் போன ஒரு நம்பிக்கையைக் காட்டி நெடுநல்வாடை புறக்கருத்தினைப் புகலுவது என்று கூறலாமோ?
                நெடுநல்வாடையில் மன்னனுக்கு முன் செல்லும் வீரன் ஏந்திச் செல்லும் வேலின் நுனியில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தழை, இடத்தாலும், சூழிநிலையாலும், பயன்பாட்டுத் தன்மையாலும் வேறுபட்டுள்ளது. 
                மேற்கூறப்பட்டக் கருத்தக்களை நோக்க வேலின் நுனியிலே பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட வேம்பினை வைத்து நற்றமிழ் புலவர் கணக்காயனார் பெற்ற புதர்வரின் தூய அகப்பாட்டைப் புறமென்று சொல்லிப் புறந்தள்ளலாமா?
நெடுநல்வாடையில் அகமும் புறமும்
                மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இவ்வகப்பாட்டுள் முல்லையும் வஞ்சியும் முறையே கலந்து, கூதிர் காலத்திலும் தலைவியை நினைந்து வாராத தலைவனாம் போர்மேற் சென்ற அரசனைக் காட்டி, ‘இன்னே வருகதில் அம்மஎன்று வழிபாடும் நடக்கிறது.  இன்னே வரவேண்டும் என்பது தலைவன் விரைவில் வந்துவிடுவான் என்ற தோற்றத்தையே அளித்து, தலைவியை எதிர்பார்க்க வைத்து இன்பம் காணும் இருத்தல் ஒழுக்கம் சிறப்பக் காணும் செந்தமிழ்ப் பனுவல் நெடுநல்வாடை.
                முல்லை நிலத்திற்குரிய கார்கால மழையும், மாலைக்காலமும், முல்லை நில மக்களும், விலங்குகளும், பூவும், கடும்புனல் சாயும் காட்டாறுமாய் முல்லை நில பின்னணி இயல்பாய் அமைந்து, தலைவியின் இருத்தல் ஒழுக்கமும் செம்மையுறப் பிணைந்துள்ள நெடுநல்வாடையில் அகம் சிறந்து விளங்குதல்  இன்புற்று அமையலாம்.  முல்லைக்கு இயைந்த புறத்திணையாகிய வஞ்சியும் இங்கே இல்லாமல் இல்லை.  தலைவனாகிய மன்னன்,

எஞ்சா மண்ணாசை வேந்தனை வேந்தன்
அஞ்சுகத் தலைசென்று அடல்குறித்து அன்றே
 (தொல்.புறத்திணை. 52)
என்றாங்கு, பகையரசனை வெல்வதற்குப் படையெடுத்துச் சென்று பாசறையில் தங்கியுள்ளான். 
                முல்லைப்பாட்டில் 103 அடிகளில், புறத்தின் ஆட்சியே விஞ்சி நிற்கும்.  நெடுநல்வாடையிலோ 188 அடிகளில் அகத்திணை முல்லையின் மணமே அதிகம்; வெறும் 21 அடிகளில் வஞ்சியின் வாடை மெல்ல வீசுகிறது.  அவ்வளவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக