Wednesday, November 7, 2012

முல்லைப்பாட்டு - தொகுப்புரை


முல்லைப்பாட்டு - தொகுப்புரை
மாலும் மழை மேகமும்
          அகன்ற இடத்தையுடைய இவ்வுலகத்தைக் காக்கின்ற, சங்கு சக்கரம் பொறித்த திருமகளைத் தாங்குகின்ற பெரிய கைகளையுடைய திருமால் மாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்த நீர் கைகளில் பட்ட அளவிலே நிமிர்ந்து உயர்ந்து எழுந்த தோற்றத்தைப்போல, கருமேகங்கள் அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைப் பருகி, வலமாக உயர்ந்து எழுந்து மலைகளில் தங்கி மழை நீரைச் சொரிந்து கொண்டே விரைந்து சென்றன.
மழைக்காலத்து மாலை நேரத்தில்
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
மேகங்கள் பெருமழையைப் பொழிந்த சிறிய துன்பம் தரும் மாலைப் பொழுதில், வயது முதிர்ந்த பெண்டிர், யாரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் உள்ள (திருமால்) கோவிலுக்குச் சென்று, நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணமிக்க முல்லை மலரையும் தூவி, இறைவனைக் கை தொழுது வேண்டி, நற்சொல் (விரிச்சி) கேட்டு நின்றனர்.
ஆய்மகளின் நற்சொல் கேட்டு தலைவியை ஆற்றுவித்தல்
சிறிய கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று,ன் தாயினைக் காணாது அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருப்பதைப் பார்த்த குளிரால் நடுங்கித் தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியிருக்கும் ஆயர்குலப் பெண், வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த உம் தாய் இப்பொழுதே வருவர் என்று கன்றிடம் கூறினாள். ஆயர்குலப்பெண் கூறிய விரிச்சியினைக் (நற்சொல்) கேட்டனர், முதுபெண்டிர்.  ஆயர்குலப் பெண்ணின் நல்ல வார்த்தைகளைக் கேட்டதனால், மாந்தளிரின் நிறத்தை உடையவளே! பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து, தலைவன் விரைவில் வருவான்.  இது உண்மை. நீ உனது வருத்தத்தினைப் போக்குவாயாக என்று மீண்டும் மீண்டும் தலைவியிடம் கூறினர்.  தலைவியோ, குவளை மலர் போன்ற கண்களில் முத்து போன்ற நீர்த் துளிக்க அழுது கொண்டே வருத்தத்தில் இருந்தாள்
பாசறை அமைத்தல்

காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில், நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் செடிகளையும், பசுமையான அதன் சிறு தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த அரணையும் அழித்து காட்டிலுள்ள முள்ளால் மதிலுக்குக் காவலாக வேலியை வளைத்து ஒலிக்கின்ற நீரினையுடைய கடல் போல் பரந்த பாடி வீட்டையும் வீரர்கள் அமைத்தனர்.
பாசறையில் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்து உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற யானை உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெற்கதிர்களையும் கலந்து கட்டியிருக்கின்ற வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழையை உண்ணாது அவற்றை நெற்றியில் துடைத்து, கூரிய முனையையுடைய மருப்பின் மேலேற்றி தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. யானையைப் பயிற்றும் மொழியன்றியும் வேறெதுவும் கல்லாத யானைப்பாகரும், கவர்த்த முள்ளுள்ள பரிக்கோலினைக் கொண்டு வடமொழியில் யானையிடம் பேசி கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
பாசறையில் வீரர்களின் அரண்கள்
          தவவேடமுடைய அந்தணர் தன் காவி நிறம் தோய்ந்த ஆடையை முக்கோலை நட்டு அதன்மேல் தொங்க விட்டிருப்பது போல, வீரர்களும் வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புப் புட்டிலைத் தொங்கவிட்டிருந்தனர்.
கூடாரம் அமைப்பதற்காக விற்களை ஊன்றி கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில் பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக வைத்து வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
பாசறையில் மன்னனுக்கென்று தனியிடம்
வேறு வேறான பல்வேறு படைகளின் நடுவிடத்தில் நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி வேறோர் தனியிடம் மன்னனுக்கென்று ஒதுக்கினர்.
மன்னன் இருப்பிடத்தில் வாளேந்திய பெண்கள்
குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும் சிறு முதுகுப் புறத்தையும் உடைய பெண்கள், இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு நிறம் அமைந்த கச்சில் சேர்த்துக் கட்டி இருந்தனர்.  அப்பெண்கள் பாவையின் கையிலே இருக்கின்ற விளக்கில் நெய் குறையக் குறைய நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
பாசறையில் காவலாளர்
அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில், காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள், நீர்த்திவலோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல தலையில் தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
நாழிகைக் கணக்கர்
          பொய்த்தல் இல்லாது நேரத்தைக் கணக்கிட்டு இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உன்னுடைய நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி) சென்றுள்ள நேரம் இவ்வளவு என்று அறிவித்தனர்.
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
          யவனர், உடம்போடு குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியிருந்தனர். இதனால் புடைத்துத் தோன்றினர். நெருக்கிக் கட்டிய ஆடையும் சட்டையும் அணிந்த அச்சம் தரும் தோற்றமும், வலிமையான உடம்பும் வீரமும் உடைய இவ் யவனர், புலிச் சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய மன்னனின் இருப்பிடத்தில் அழகிய மணி விளக்கினையும் ஏற்றி வைத்தனர்.

மன்னனின் பள்ளியறையில் மிலேச்சர்
          வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில் (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்க முடியாத சட்டையணிந்த மிலேச்சியர் இருந்தனர்.
பாசறையில் மன்னனின் நிலை
போர் செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால், மன்னன் பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற) போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே படுத்திருந்தான்.  பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண் ஏற்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற ஆண் யானைகளையும், அடியுண்ட பாம்பு துடிப்பதையும் போல ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும், தேன் ஒழுகும் வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைத்தும், தோலாலான கடிவாளத்தையும், அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரையைப் பற்றி சிந்தித்தும், ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றி மற்றொரு கடகம் அணிந்த கையினால் தலையைத் தாங்கி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
மன்னன் நடந்து முடிந்த போரினை நினைத்து உறங்காமல் இருந்தான்.ஆனால், அடுத்தநாள் பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்தி வலிமையான விரலாலே தன் ஒளியைத் தங்கச் செய்யும் போருக்கு அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியைக் கொடுத்தமையால் மனநிறைவு பெற்று பகையரசர் கேட்டு நடுங்க வெற்றி முரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்) இனிமையாகத் துயில் கொண்டான்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை நெஞ்சமானது, ‘நீ உன் துயரத்தை ஆற்றியிருஎன்று சொல்லிக் கொண்டிருந்தது.  தலைவியோ, துயரத்தை மறைக்க முடியாது வருத்தத்தில் இருந்தாள்.பின் நீண்ட நேரம் சிந்தித்துத் தன்னைத் தேற்றினாள்;  கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற கழறாமல் அணிந்து கொண்டாள்;  வருத்தத்தின் காரணமாக அறிவு மயங்க மயக்கத்தில் பெருமூச்செறிந்தாள்;  அம்பு தைத்த மயில் போன்று நடுங்குகினாள்;  நடுக்கத்தில் அணிந்திருக்கும் அணிகலன்களும் நெகிழ்கின்றன.  இந்த நிலையிலும் தன் துயரத்தை மறைத்து பாவை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் அகன்ற சிறந்த உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போல் சொரிகின்ற இனிய முழக்கத்தினைக் கேட்டவாறே படுத்துக் கிடக்கின்றாள்.
போரில் வெற்றி பெற்று தலைவன் வருதல்
பகைவரை வென்று அவர்களுக்கு விருப்பமான நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்து வெற்றியை அறிவிக்கும் ஊது கொம்பும் சங்கும் முழங்க வீட்டிற்குத் திரும்புகின்றான் தலைவன்.

கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லை நிலம்
முல்லை நிலத்து நுண்ணிய மணலில் நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருந்தன. தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரிந்து கொண்டிருந்தன.  காந்தளின் குவிந்த மொட்டுக்களோ அழகிய கை போல் மலர்ந்திருந்தன. இதழ்கள் நிறைந்த செங்காந்தள் மலர் உதிரம் போல் பூத்திருந்தன. இவ்வாறு பலவகை பூக்களால் செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே வானம் தப்பாமல் மழை பெய்ததனால் விளைந்த வளைந்த கதிரினையுடைய வரகினிடையே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண் மானுடன் பெண் மானும் துள்ளிக் குதித்து விளையாடின.
தலைவனின் வருகை
வளமான முல்லை நிலத்தில் எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில் போர் வினை முடித்துத் திரும்பும் தலைவன், முதிர்ந்த காய்களையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு, பின்னோக்கிச் சென்று மறையுமாறு விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான்.  தலைவனின் நெடிய தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரையின் குளம்பொலி, தலைவனின் வரவு பார்த்துக் காத்திருக்கும்  தலைவியின் செவிகள் நிறையுமாறு ஆரவாரித்தன.

No comments:

Post a Comment