நெடுநல்வாடையால் அறியலாகும்
பண்டைத் தமிழகம்
சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அக்கால மககளின் வாழ்க்கையினைப் பார்க்க முடிகிறது. அதுபோல் நெடுநல்வாடையிலும், அன்றைய தமிழ் மன்னரும், மக்களும் வாழ்ந்த முறையினைக் காண முடிகின்றது. அதுவும் குளிர்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இன்றும் நம் கண் முன்னே காணும் இனிய காட்சிகளாகவே காட்சி தருகின்றன. ஒவ்வொரு காட்சியும் ஒப்பிலா தமிழகத்தின் உண்மை பிரதிபலிப்புகள். காலம் காட்டும் கண்ணாடியாய் நின்று அக்காலத் தமிழகத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கும் இலக்கியமாகிய நெடுநல்வாடை வழி சங்கத் தமிழரைக் காண்போம்.
குளிர்காலத்தில் கோவலரின் நிலை
மழை பெய்தலால் இடையர்கள், ஆநிரைகளை மழை வெள்ளம் வாராத மேட்டுப்பகுதிக்கு இட்டுச் சென்றனர். பழகிய இடத்தை விட்டு புதிய பகுதிக்குச் செல்லும்போது ஏற்படும் அலுப்பும் சலிப்பும் அவர்களுக்கும் இருந்தது போலும். பாடல் வரிகளே காட்சியைக் காட்டுகின்றன.
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, (3 - 5)
என்கிறது நெடுநல்வாடை.
மாலை வழிபாடு
பெண்கள் மாலைக்காலத்தில் விளக்கேற்றுவதும், நெல்லையும் மலரையும் தூவிக் கைத் தொழுது அதனை வணங்குவதும் வழக்கமாகக் கொண்டிருந்தமையினை,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது, (42 - 43)
என்ற அடிகள் காட்டுகின்றன.
வாடைக்காலத்து பயன்படுத்தாத பொருட்கள்
கோடைக்காலத்து விசிறி பயன்படுத்தியுள்ளார்கள். அது ஆலவட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம் சுருக்கி; கொடுந்தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; (57 - 59)
கோடைக்காலத்து அரைத்துப் பூசிய சந்தனத்தையும் குளிர்க் காலத்து நாடவில்லை. இதனால் வடநாட்டிலிருந்து வாங்கி வந்த சந்தனக்கல்லும், தென்திசையிலிருந்து பெற்ற சந்தனக் கட்டைகளும் பயன்படுத்தப்படாமல் கிடந்தன.
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப, (51 - 52)
குடிப்பதற்கும் குவிந்த வாயையுடைய குடத்திலிருந்த குளிர்ந்த நீரினைப் பருகவில்லை.
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், (64 - 65)
இவற்றை நோக்க கோடைக்காலத்து விசிறியும், சந்தனமும், தொகுவாய்க் கன்னலில் இருக்கும் குளிர்ந்த தண்ணீரும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தமையினை அறியமுடிகிறது. அதோடு தமிழரின் காலம் அறிந்து உடல்நலம் போற்றி வாழ்ந்த அருமையும் புலப்படுகிறது.
வாடைக் காலத்து பயன்படுத்தும் பொருட்கள்
வாசனை மர விறகில் நெருப்பூட்டி தூயமூட்டியில் ஏற்படுத்திய வாசனைப் புகையும் நெருப்பும் குளிருக்கு இதமாயின.
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து,
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப, (55 - 56)
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; (66)
என்பதும் இச்செய்திகளைப் பகருகின்றன. மேனியில் பூசுதற்கு குற்றேவல் செய்வோர், கொள்ளின் நிறத்தை ஒத்த கத்தூரி முதலிய வெப்பம் தரும் நறுமணப்பொருள்களை அரைத்தனர்.
காலம் காட்டும் இயற்கைக் கருவி
மாலைக்காலம் வந்துவிட்டது என்பதை அறியவே முடியாதவாறு மழைக்காலம் விளங்கியது.
விளக்கு ஏற்றி வழிபட மாலைக் காலத்தைப் பெண்கள் அறிவதற்குத் தாம்பாளத்தில் (தட்டு) மலரும் பருவத்து பிச்சியின் அரும்புகளை இட்டு வைத்திருந்தனர். மாலையும் வந்தது; மலரும் மலர்ந்தது; வந்தது மாலையென மகளிரும் அறிந்தனர் ; வழிபாடும் இயற்றினர்.
இயற்கையினைக் காலக்கருவியாய் பயன்படுத்திய தமிழரின் அறிவினை என்னவென்பது? இதனினும் மேலாய் பொழுதினை அறிவித்த மலரும் பருவத்து மலரினைப் ‘போது’ என்று பெயரிட்ட புலமையும் வியந்து போற்றுதற்குரியது.
கட்டிடக்கலை
சங்க காலத்தில் கட்டிடக்கலை பற்றிய நூல்கள் இருந்திருக்கின்றன; அந்நூலைப் படித்த சிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களும் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நமக்குத் தருகிறது நெடுநல்வாடை.
கட்டிடக்கலை பற்றிய நூல்களைப் படித்த வல்லுநர்கள், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து திசைக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு மன்னனுக்குரிய மனை வகுத்தனர்.
இச்செய்தியின் வழி மனை வகுப்பதற்கு நெறிமுறைகளை உருவாக்கி உயர்ந்த நிலையில் இருந்த தமிழகத்தினைக் காண முடிகிறது.
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
.
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (76 - 78)
தச்சுக்கலை
கட்டிடக்கலையின் ஒரு பகுதியாகிய தச்சுக்கலை சிறப்புற்றிருந்தது என்பதும் நெடுநல்வாடை வழி அறிய முடிகிறது. அரண்மனையின் கதவுகளைப் பருத்த இரும்பால் இணைப்பதும் இடைவெளி இன்றி நிலையொடு பொருத்துவதும் தச்சனின் தொழில் வல்லமையைக் காட்டும் இனிய பகுதிகள். இவை அக்காலக் ‘கைவல்’
கம்மியனின் கலைநயத்தை அறிவிக்கிறது. அவர்கள் மரத்தால் செய்யப்பட்ட கதவுகளில், குவளை மலரின் (கண் போன்ற அமைப்புடையது) அரும்பு இதழ் விரிதலைப் போன்ற அமைப்புடன் புதுமை போன்ற கைப்பிடி பொருந்திய செய்தியைப் படிக்கின்ற போதே தமிழன் என்பதில் இறும்பூது கொள்ள செய்கிறதன்றோ! இதோ அவ்வரிகள்:
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு,
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து,
போது அவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற, போர்அமை புணர்ப்பின்,
கைவல் கம்மியன் முடுக்கலின், புரைதீர்ந்து, (80 - 85)
யானைத் தந்தத்தால் இரண்டு இலை வடிவம் இடையே விளங்க உருவாக்கப்பட்ட தலைவியின் கட்டில், சூல் முதிர்ந்த பெண்களின் முலை போன்று திரண்ட குடத்தையுடையதாகிய கட்டிலிற் காலின் இடைப்பகுதியும், பூண்டின் முதற்பகுதிபோல் காலின் அடிப்பகுதியும், பூண்டின் முதற்பகுதிபோல் காலின் அடிப்பகுதியும் அமையக் கட்டிலினைச் செய்த கம்மியன் (தச்சன்) வேலைப்பாடு தமிழகத்தின் கலைநயத்தைச் சொல்லுவன.
………….நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்
கூர் உளிக் குயின்ற, ஈர்இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்ப
புரைதிரண்டிருந்த குடத்த, இடை திரண்டு,
உள்ளி நோன் முதல் பொருந்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் (117 - 123)
கைவினைக்கலை
தகடுகளில், குத்துதல் தொழில் அமைத்தலும் செய்துள்ளனர். தலைவியிருந்த கட்டிலின் மேலிடம், புலியின் வரியினை ஒத்த நிறமுடைய பூக்கள் நிறைந்த தாம்பாளத்தைப் போன்று குத்துதல் தொழிலமையுமாறு தகடுகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது என்ற செய்தியும் பண்டைத் தமிழகத்து மக்களின் கலை ஆர்வத்தை அறியக் கூடியதாய் உள்ளது. அக்கலையைப் போற்றி அரண்மனையில் இடம்பெறச் செய்த மன்னரும் போற்றுதற்குரியர்.
ஒப்பனைக்கலை
அரண்மனை மதிலின் கதவுகளில் செம்மையான அரக்கு வண்ணம் பூசப்பட்டு ஒப்பனைச் செய்யப்பட்ட காட்சியை நெடுநல்வாடையில் பார்க்க முடிகிறது.
.......................செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி..... (80 - 81)
என்பதே அவ்வரிகள்.
அந்தப்புரத்துச் சுவர்களில் வெள்ளி போன்ற வண்ணம் பூசப்பட்டிருந்தது, தூண்கள் நீலமணியைக் காண்பது போல இருந்தது, செம்பினால் உருவாக்கப்பட்டது போல் நெடிய சுவர்க் காட்சியளித்தது என்று கூறுகின்ற வர்ணனைகள் அனைத்தும் தமிழர்களின் ஒப்பனைக் கலை ஆர்வத்தையே காட்டுவதாகவே உள்ளது.
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்,
செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ்சுவர், (110 - 112)
ஓவியக்கலை
அந்தபுரத்துச் சுவரில் பல வகைப்பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருப்பது போன்ற காட்சி தீட்டப்பட்டிருந்தது.
……..செய்வு உறு நெடுஞ்சுவர்,
உருவப் பல்பூ ஒரு கொடி வளைஇ, (112 - 113)
என்பதாலும்,
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை,
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக,
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா, (159 - 163)
என்று கட்டிலின் மேலிடத்தில் திங்களோடு உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சி தீட்டப்பட்டிருந்தது என்பதாலும் ஓவியக்கலையும் அந்நாளில் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தமை தெளிவாகிறது. தலைவி கட்டிலில் அமர்ந்திருக்கும் காட்சியைக் கூட ‘புனையா ஓவியம்’ என்று கூறுவது ஓவியக்கலையின் ஆட்சியையே பெற வைகிறது.
குளிர்காலமும் - குடிகாரர்களும்
திண்ணிய தோள், முறுக்குண்ட உடம்பு, தழை மாலையணிந்த மேனி, உடல் வலிமை மிக்க இம்மனிதர்கள் கள்ளினை அதிகமாகக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியோடு, மழைத்துளி தன் மேனியில் விழுவதையும் பொருட்படுத்தாது மூதூரின் தெருக்களில் சுற்றி வந்தனர்.‘
................முழுவலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி பேணார்............... (32 - 34)
இக்காலம் காணும் காட்சிகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னருள்ள நம் இலக்கியங்களிலும் காணமுடிகிறது.
………….குத்துறுத்து,
புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து, (125 - 126)
இவையன்றியும், அழகாக கைவினைப் பொருள்களைச் செய்தலில் வல்லவர்களும் இருந்துள்ளனர்.
கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம்…… (57 - 58)
என்பதால் இதனை அறியலாம்.
அணிகலன்கள்
பெண்கள் காதிலே குழை அணிந்திருந்தனர்.
பூங்குழை (38)
வார்குழை (139)
கைகளில் தொடிப் புனைந்திருந்தனர்.
பொலந்தொடி (141)
கைவிரல்களில் நெளி மோதிரத்தைச் செருகியிருந்தனர்.
வாளைப்பகுவாய் கடுப்ப வணக்குறுத்து,
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்து, (143 - 144)
ஆடை
பெண்கள் மார்பிலே கச்சினைக் கட்டியிருந்தனர்.
……………………………………………………முகிழ் முலை,
வம்பு விசித்த யாத்த, வாங்கு சாய் நுசுப்பின், (149 - 150)
பூந்துகில் (145) என்ற பூ வேலைப்பாடமைந்த பட்டாடையையும் ‘அவிர் நூல் கலிங்கம் ’ என்ற நூலால் நெய்யப்பட்ட ஆடையையும் உடுத்தியிருந்த செய்தியை நெடுநல்வாடை வழி அறிய முடிகிறது. கஞ்சியிட்டு, துவைத்து மடித்த ஆடையினையும் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தினர்.
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து, (134)
ஆண்கள் இரு புறமும் தொங்கும் ஆடையைத் தோளிலே தொங்கவிட்டிருந்தனர்.
இருகோட்டு அறுவையர் (35)
வானவியல்
கார்காலம் (1 - 19) குறித்த செய்திகளும் கார்கால மழை மிகுந்த கூதிர்காலமாய் நிலைபெற்ற தன்மையையும் (12 - 72) நெடுநல்வாடையில் காணலாம்.
தலைவியின் கட்டிலின் மேற்பகுதியில் இராசி மண்டலம் வரையப்பட்டு, உரோகிணி திங்களோடு இருக்கும் காட்சியும் தீட்டப்பட்டிருந்தது (159 - 168). இதன்வழி தமிழரின் வானவியல் அறிவு புலனாகிறது.
அரண்மனை வகுப்பதற்கு நல்லநேரம் பார்த்து கால் நாட்டும் நிகழ்வினைக்
குறிப்பிடுமிடத்தும் (72 - 78) நாள்கோள் பற்றிய அறிவு வெளிப்படுகிறது.
குறிப்பிடுமிடத்தும் (72 - 78) நாள்கோள் பற்றிய அறிவு வெளிப்படுகிறது.
மரங்கள்
அகிற்கட்டையை எரித்து புகையிடும் மரபினைப் பார்க்கிறோம் (55-56). கூதிர் காலத்துச் சந்தனம் பூசுதல் இல்லை (51
- 52) என்பதாலும் சந்தனமரமும் பயன்பாட்டில் இருந்ததைப் பெற முடிகிறது.
வேம்பின் தழையை வீரன் தன் வேலின் நுனியில் கட்டியிருந்தான் (176) என்பதால் பேய்க்குக் காப்பாக வேம்பைப் பயன்படுத்தியமையும் அறிகிறோம். இன்று வரை இம்மரபு மக்களின் நம்பிக்கையில் ஒன்றாக இருந்து வருவதைத் தென் மாவட்டங்களில் அதிகம் காணலாம்.
விலங்குகள்
யானை
(169), மாத்தாட் பிடி
(178), நெடுமயிர் எகினத் தூநிற ஏறு (89), வேழம்
(87), மா (9), நாகம் ஒழி எயிறு
(117), பல் உளைப் புரவி
(94), பாய்பரிக் கலிமா (179).
பறவைகள்
அன்னத்தின் வெண்மையான மயிர் (132) படுக்கையில் பரப்பப் பட்டிருந்தது.
அரண்மனையில் கவரிமான்களுடன் அன்னப்பறவைகளும் விளையாடின (90 - 92), குளிரின் காரணமாக ஆண்புறா, பெண்புறாவோடு சேர்ந்து இரை தேடச் செல்லாமல் வீட்டிலே இருந்தது (45 - 46) மயிலின் தோகை நீண்டிருக்கும் (97 - 98) வண்டுகள் கள்ளினை மொய்க்கும் (33), நெடுநல்வாடையில் காணப்படும் இச்செய்திகள், பறவைகள் குறித்த தகவல்களைப் பெறத் துணை புரிகின்றன. இன்று இப்பறவையினங்களில் அன்னம் என்ற பறவையினம் அழிந்துவிட்ட அவலத்தை உணருகிறோம்.
இசைக்கருவி
நெடுநல்வாடையில் யாழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்மையின் திரிந்த இன்குரல் தீம் தொடை, (68)
ஆடல் மகளிர்
ஆடலும், பாடலும் அரங்கேறிய அழகிய செய்தி நெடுநல்வாடை வழிப்பெறுகிறோம்.
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார், (67)
உலோகங்கள்
இரும்பு (42)
பரு இரும்பு (80)
வெள்ளி (36)
போன்றன பயன்பாட்டில் இருந்துள்ளன.
விளக்கு
யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்கினையும் (102) இரும்பால் செய்யப்பட்ட விளக்குகளையும் (42) பயன்படுத்தியுள்ளனர் அன்றைய தமிழர். பாண்டில் விளக்கும் போர்ப்பாசறையில் எரிந்தது (175). பாண்டியரின் போர் பாசறை என்பதால் அங்கே எரியும் விளக்கு பாண்டில் ஆனதோ?
வீடுகள்
மக்கள் வாழ்கின்ற பல மாடிகளைக் கொண்ட வீடுகளும் (29) இருந்தன. மன்னனின் அரண்மனை பல உறுப்புக்களைக் (72 - 92) கொண்டு விளங்கியது.
பயிறு வகைகள்
நெல் (43)
கொள் (50)
அரிய சொற்கள்
அர்ப்பனி - கண்ணீர் (164)
தொகுவாய் கன்னல் - குறுகிய வாயுடைய பாத்திரம் (65)
பிடகை - பூந்தட்டு (39)
விளக்கம் - மோதிரம் (144)
வட்டம் - விசிறி (58)
வம்பு - கச்சு (150)
வடசொற்கள்
தசநான்கு (115)
சாலேகம் (125)
உரோகிணி (163)
‘வீழ்’ தாலியா?
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ, (136 - 137)
பிரிவுத் துயரோடு கட்டிலில் இருக்கும் தலைவியைப் பற்றிய வர்ணனை இது. இதற்கு உரை வகுத்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ‘பின்னமை நெடு வீழ் - குத்துதல் அமைந்த நெடிய தாலி’ என்று உரை வகுத்துள்ளார். முதுகிலே கிடந்த (பின்புறம்) கூந்தல், கட்டிலில் வீற்றிருக்கும் தலைவியின் மார்பிலே, கிடந்தது, முத்துமாலை கிடந்த
மார்பிலே கூந்தல் தாழ்ந்து தொங்கியது என்பதே பொருள், சிறுபாணாற்றுப்படையிலும்,
பிடிக்கை யன்ன பின்னும்வீழ் சிறுபுறத்து (191)
என்ற வரியினை நோக்க ‘வீழ்’ என்பது கூந்தல் வீழ்ந்து கிடந்த பின்புறம் என்ற பொருளையே தருகிறது. வீழ் என்ற சொல் வேறு எந்தப் பாடலிலும் ‘தாலி’ என்ற பொருளினைத் தரவில்லை என்பதும் நாம் சிந்தித்துத் தெளிதல் அவசியமாகிறது.
எனின், நெடுநல்வாடையில் கூறப்பட்ட ‘வீழ்’ என்ற சொல், தாலி என்ற பொருளைத் தரவில்லை என்ற முடிவினைப் பெற வைப்பதாகக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக