Wednesday, November 7, 2012

முல்லைப்பாட்டு- உரை


 முல்லைப்பாட்டு - உரை
                    மால்போலத் தோன்றும் மழைமேகம்
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி (1 - 5)
கருத்துரை
அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை வளைத்துக் காக்கின்ற சக்கரம், சங்கு பொறிக்கப்பட்ட திருமகளைத் தாங்குகின்ற பெரிய கைகளையுடைய திருமால், மாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்த நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்து எழுந்த தோற்றத்தைப் போன்று, மேகங்கள் அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலமாக உயர்ந்து எழுந்து, மலைளில் தங்கி  விரைந்து சென்றன.
சொற்பொருள் விளக்கம்
நனந்தலை - அகன்ற இடம், உலகம் - ஞாலம்; வையகம், வளைஇ - வளைத்து, நேமியோடு - சக்கரத்தோடு, வலம்புரி - சங்கு, பொரித்த - பொறித்துள்ள,  மா - திருமகள், தாங்கு - தாங்குகின்ற, தடக்கை - பெரிய கை, நீர் செல - நீரை வார்க்க, நிமிர்ந்த - உயர்ந்து நின்ற, மாஅல்போல - திருமால் போல,  பாடு இமிழ் - ஒலி முழங்கும், பனிக்கடல் - குளிர்ந்த கடல், பருகி - குடித்து, வலன் - வலமாக, ஏர்பு - எழுந்து; உயர்ந்து, கோடு - மலை, கொண்டு எழுந்த - தங்கி எழுந்த, கொடுஞ் செலவு - விரைந்து செல்லல், எழிலி - மேகம்,
மழைக்காலத்து மாலை நேரம்
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, (6)
கருத்துரை
அம்மேகங்கள் பெருமழையைப் பொழிந்த சிறிய துன்பம் தரும் மாலைப்பொழுதில்,
சொற்பொருள் விளக்கம்
பெரும்பெயல் - பெருமழை, பொழிந்த - பெய்த, சிறு - சிறு கால அளவினதாகிய, புன் - துன்பம், மாலை - மாலைப்பொழுது,
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                          
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப - (7 - 11)

கருத்துரை
பெரிதும் வயது முதிர்ந்த பெண்டிர், யாரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் சென்று  (திருமால் கோவிலுக்கு)  நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க முல்லை மலரையும் தூவி, (இறைவனை வேண்டி) கைதொழுது  நற்சொல் (விரிச்சி) கேட்டு நின்றனர்.  அப்பொழுது,
சொற்பொருள் விளக்கம்
          அருங்கடி - அரிய காவல், மூதூர் - பழைய ஊர், மருங்கில் - பக்கத்தில், போகி - சென்று, யாழ்இசை - யாழின்இசை, வண்டு - வண்டினம், ஆர்ப்ப - ஆரவாரிக்க, நெல்லொடு - நெல்லோடு, நாழி கொண்ட - நாழியில் கொண்ட, நறு - மணமிக்க, வீ - மலர், அரும்பு - மொட்டு, அவிழ் - மலர்ந்த, அலரி - மலர்ந்த பூ, தூஉய் - தூவி, கைதொழுது - கையினைத் தொழுது, பெருமுது - வயதான, பெண்டிர் - பெண்கள், விரிச்சி - நற்சொல், நிற்ப - நிற்பர்,
ஆய்மகளின் நற்சொல் கேட்டலும்
தலைவியை ஆற்றுவித்தலும்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                        
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்                                     
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப, (12 - 23)
கருத்துரை
சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன் தாயினைக் காணாது துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்த்து. அதனைப்  பார்த்துக் குளிரால் நடுங்கித் தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள  ஆயர்குலப் பெண்,  வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய  தாயர் இப்பொழுதே வருவர் என்று  கூறிய நன்மை தரும் நல்ல சொல்லைக் கேட்டோம்.
          நல்லவர்களின் நல்ல வாய்ச் சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான்.  இது உண்மை. நீ உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிரின் நிறத்தினை உடையவளே! என மீண்டும் தலைவியிடம் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுது கொண்டு குவளை மலர் போன்ற கண்களில் முத்துப் போன்று நீர்த்துளிக்க, வருத்தத்தில் இருந்தாள்.

சொற்பொருள் விளக்கம்
சிறுதாம்பு - சிறிய கயிறு, தொடுத்த - கட்டப்பட்ட, பசலைக் கன்று - இளம் கன்று, உறுதுயர் - அடைகின்ற துயர், நோக்கி - பார்த்து, ஆய்மகள் - ஆயர் குலப்பெண், நடுங்கு - நடுங்கும், சுவல் - தோள், அசைத்த - கட்டிய, கையள் - கைகளை உடையவயள், கைய - கையிலுள்ள, கொடுங்கோல் - வளைந்த கோல், கோவலர் - ஆடுமாடு மேய்க்கும் ஆயர்குலத்தவர், பின்நின்று - பின்னே நின்று, உய்த்தர - செலுத்தலைச் செய்ய, இன்னே - இப்பொழுதே, வருகுவர் - வருவர், தாயர் - தாய்ப்பசு, என்போள் - என்று கூறியவள், நன்னர் - நன்மை, நன்மொழி - நல்ல மொழி, கேட்டனம் - கேட்டோம், அதனால் - அதன் காரணமாக, நல்ல - நல்ல, நல்லோர் - நல்லவர்கள், வாய்ப்புள் - வாய்ச்சொல், தெவ்வர் - பகைவர், முனைகவர்ந்து - பகைவர் இடத்தைக் கைப்பற்றி, கொண்ட - எடுத்துக்கொண்ட, திறையர் - கப்பப் பொருளாகப் பெற்றவர், வினை - போர்த்தொழில், முடித்து - நிறைவேற்றி, வருதல் - வருவார், தலைவர் - தலைவர், வாய்வது - உண்மை, நீநின் - நீ உன்னுடைய, பருவரல் - துன்பம், எவ்வம் - வருத்தம், களை - நீக்கு, மாயோய் - மாமை நிறம் உடையவளே, என - என்று, காட்டவும் காட்டவும் - வற்புறுத்தவும் வற்புறுத்தவும், காணாள் - தேற்றுதலை ஏற்காது, கலுழ்சிறந்து - அழுகை மிகுந்து, பூப்போல் - குவளை மலர்போல், உண் கண் - மையுண்டகண், புலம்பு - தனிமை, முத்து - முத்துப்போன்ற நீர்த்துளி, உறைப்ப - ஒழுக,
          அடுத்து வரும் 57 வரிகளில் பாசறையின் அமைப்பும், தலைவியைப் பிரிந்து சென்று, பாசறையில் தங்கி இருக்கும் தலைவனது இயல்புன் உணர்த்தப்பட்டுள்ளன.
பாசறை அமைத்தல்
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி,                          
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (24 - 28)
கருத்துரை
காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில் நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் செடிகளையும், பசுமையான சிறு தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த அரணையும் அழித்து, காட்டிலுள்ள முள்ளால் மதிலுக்குக் காவலாக வேலியை வளைத்து, ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாடி வீட்டை அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
          கான்யாறு - காட்டாறு, தழீஇய - சூழ்ந்த, அகல் நெடும் - அகன்று நீண்ட, புறவு - முல்லைக்காடு, சேண் - தொலைவு, நாறு - மணம்வீசும், பிடவமொடு - பிடவம் செடிகளோடு, பைம் - பசுமையான, புதல் - சிறுதூறு, எருக்கி - அழித்து, வேட்டு - வேட்டுவர், புழை - சிறுவாயில், அருப்பம் - அரண்; கோட்டை, மாட்டி - அழித்து, காட்ட - காட்டிலுள்ள, இடுமுட் - முள்ளால் இடப்பட்ட, புரிசை - மதில், ஏமுற - காவலாக, வளைஇ - வளைந்த, படுநீர் - ஒலிக்கும் நீர், புணரி - கடல், பரந்த -ன்ற, பாடி - பாசறை,
பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற                                             
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த,
வயல்விளை, இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து,
அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென,
கவைமுட் கருவியின், வடமொழி பயிற்றி,                            
கல்லா இளைஞர், கவளம் கைப்ப (29 - 36)
கருத்துரை
          பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்து உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற மதநீர் ஒழுகும் கன்னங்களும், சிறிய கண்களும் கொண்ட யானை - உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெற்கதிர்களையும் கலந்து கட்டியிருக்கின்ற வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழையை உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரீய முனையையுடைய மருப்பின் மேலேற்றி தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. (யானையைப் பயிற்றும் மொழியன்றியும் வேறெதுவும் கற்காதவர்) பாகர், வடமொழியில் யானையிடம் பேசி கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
சொற்பொருள் விளக்கம்
உவலை - தழை, கூரை - மேற்கூரை, ஒழுகிய தெருவில் - ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருவில், கவலை - நாற்சந்தி கூடுமிடம், முற்றம் - முன்னிடம், காவல் நின்ற - காவலாக நின்ற, தேம்படு - மதநீர் ஒழுகும், கவுள - கன்னம், சிறுகண் யானை - சிறிய கண்களை உடைய யானை, ஓங்குநிலை - ஓங்கி வளர்ந்துள்ள, கரும்பொடு - கரும்போடு, கதிர் - நெற்கதிர், மிடைந்து - நெருங்க, கலந்து யாத்த - கட்டிய, வயல் விளை - வயலில் விளைந்த, இன்குளகு - இனிய அதிமதுரத்தழை, உண்ணாது - உணவாகக் கொள்ளாது, நுதல் - நெற்றி, துடைத்து - துடைத்து, அயில் நுனை - கூர்மையான முனையையுடைய, மருப்பின் - தந்தத்தின், தம் - தனது, கையிடை - ஏற்றியுள்ள தும்பிக்கையின் இடையில், கொண்டென - கொண்டிருக்க, கவைமுள் - பிளவுபட்ட முள்ளால் (ஆன கருவி), கருவியின் - பரிக்கோலின், வடமொழி - வடமொழி, பயிற்றி - பல காலும் கூறி, கல்லா - கல்லாத, இளைஞர் - யானையைச் செலுத்தும் பாகர், கவளம் - உணவு, கைப்ப - ஊட்ட,
பாசறையில் வீரர்களின் அரண்கள்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை                       
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகுநிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக,  (37 - 42)
கருத்துரை
தவவேடமுடைய அந்தணர், தன் காவி நிறம் தோய்ந்த ஆடையை முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வீரர்கள் தான் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணமான  வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புப் புட்டிலைத் தொங்கவிட்டனர். கூடாரம் அமைப்பதற்காக விற்களை ஊன்றி கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில், பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக வைத்து வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
          கல் - காவிக்கல், தோய்த்து - நனைத்து; ஊறவைத்து, உடுத்த - அணிந்த, படிவம் - தவவேடம், பார்ப்பான் - அந்தணன், முக்கோல் - மூன்று பிரிவாக அமைந்துள்ள கோல், அசைநிலை - தங்க வைத்த தன்மை, கடுப்ப (உவம உருபு) - போல, நல்போர் - நல்லபோர், ஓடா - (புறமுதுகிட்டு) ஓடாத, வல்வில் - வலிமையான, தூணி - அம்புறாத்துணி, நாற்றி - தொங்கவிட்டு, கூடம் - கூடாரம், குத்தி - ஊன்றி, கயிறுவாங்கு - கயிற்றால் வளைத்த, இருக்கை - இருப்பிடம், பூந்தலை - பூவேலைப்பாடு அமைந்த தலைப்பகுதி, குந்தம் - கைவேல், குத்தி - நட்டு, கிடுகு - படல்; கேடயம், நிரைத்து - வரிசையாக வைத்து, வாங்குவில் - வளைந்த வில், அரணம் - அரண், அரணமாக - அரண்களாக,
பாசறையில் மன்னனுக்குத் தனிஇடம்
வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்,
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு (43 - 44)
கருத்துரை
வேறு வேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி, வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
          வேறுபல் - பல்வேறு, பெரும்படை - பெரிய படை, நாப்பண் - நடுவிடத்தில், வேறு ஓர் - வேறோர், நெடுங்காழ் - நீண்ட கோல், கண்டம் (வடசொல்) - கூறுபடுத்தற்குரிய பல நிறத்தாலான திரை, கோலி - வளைத்து, அகம் - உள்வீடு, நேர்பு - உடன்பாடு,
மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து,              
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,  (45 - 49)
கருத்துரை
குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும் அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டியிருந்தனர். பாவையின் கையிலே  இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
சொற்பொருள் விளக்கம்
குறுந்தொடி - குறுகிய வளை, முன்கை - கையின் முன்பகுதி, கூந்தல் - தலைமயிர், அம் - அழகிய, சிறு - சிறிய, புறத்து - முதுகுப்பகுதி, இரவுபகல் - இரவைப் பகலாக்கும், செய்யும் - செய்கின்ற, திண்பிடி - வலிய கைப்பிடி, ஒள்வாள் - ஒளி வீசும் வாள், விரவு - கலந்த; சேர்ந்த, வரி - நிறம், கச்சின் - இரவிக்கையின், பூண்ட - அணிந்த, மங்கையர் - பெண்கள், நெய்உமிழ் - நெய் வார்க்கும், சுரையர் - திரிகுழாயினை உடையர், நெடுந்திரி - நீண்டதிரி, கொளீஇ - கொளுத்தி, கைமை - கையிலே இருக்கின்ற, விளக்கம் - விளக்கின், நந்துதொறும் - குறையும் தொறும், மாட்ட - கொளுத்த,
பாசறையில் காவலாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்,                        
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (50 - 54)
கருத்துரை
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில் - காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள். நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல  தலையில்  தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
சொற்பொருள் விளக்கம்
நெடுநா - நீண்டநாக்கு, ஒண்மணி - ஒளிபொருந்திய மணி; அழகிய மணி, நிழத்திய - ஓசை அடங்கிய, நடுநாள் - நடு யாமத்தில், அதிரல் - காட்டு மல்லி, பூத்த - பூத்திருக்கும், ஆடுகொடி - ஆடுகின்ற கொடி, படாஅர் - சிறுதூறுகள், சிதர் - நீர்த் திவலை; மழைத்தூறல், வரல் - வருகின்ற, அசை - அசைந்து, வளி - காற்று, அசை - அசைந்து, வந்துஆங்கு - வருவது போல, துகில் - துணி, முடித்து - தலைப்பாகைக் கட்டி, போர்த்த - உடம்பைப் போர்த்தி, தூங்கல் - தூக்க மயக்கம், ஓங்கு - உயர்ந்த, நடை - ஒழுக்கம், பெருமூதாளர் - வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், ஏமம் - காவல், சூழ - சுற்றிவர,
நாழிகைக் கணக்கர்
பொழுதுஅளந்து அறியும், பொய்யா மாக்கள்,              
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்; நின்
குறுநீர்க் கன்னல் இனைத்துஎன்று இசைப்ப  (55 - 58)
கருத்துரை
பொய்த்தலில்லாது நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர்  மன்னனைக் கண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுள்ள நேரம் இவ்வளவுஎன்று அறிவித்தனர்.
சொற்பொருள் விளக்கம்
பொழுது அளந்து - பொழுதினை இத்துணை என்று கணக்கிட்டு, அறியும் - அறிகின்ற, பொய்யா மாக்கள் - பொய் கூறாத மக்கள், தொழுது - வணங்கி, காண் - கண்டு, கையர் - கைகளையுடையர், தோன்ற - புகழ்தெரியுமாறு, வாழ்த்தி  - வாழ்த்திக்கூறி, எறிநீர் - அலையெறியும் கடல், வையகம் - ஞாலம், வெலீஇய - வெல்வதற்கு, செல்வோய் - செல்பவனே, நின் - உன்னுடைய,  குறுநீர் - சிறிய நீர், கன்னல் - நாழிகை வட்டில் (காலத்தை அளந்து அறியும் கருவி), இனைத்து - சென்ற நாழிகை இவ்வளவு, என்று - என்று, இசைப்ப - சொல்ல,
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
மத்திகை வளைஇய, மறிந்துவீங்கு செறிவுடை,
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,                     
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்,
திருமணி விளக்கம் காட்டி, ..............  (59 - 63)
கருத்துரை
குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும், சட்டையும் அணிந்த - அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர் - புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய (மன்னன் இருக்கும்) நல்ல இல்லத்தில் அழகிய மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்.
சொற்பொருள் விளக்கம்
          மத்திகை - குதிரைச் சவுக்கு, வளைஇய - வளைத்துக் கட்டிய, மறித்து - மடக்கி, வீங்கு - புடைத்து, செறிவுடை - நெருக்கிக் கட்டிய, மெய்ப்பை - சட்டை, புக்க - அணிந்த, வெருவரும் - அச்சம் தரும், தோற்றத்து - தோற்றம் உடையவராய், வலிபுணர் - வலிமை பொருந்திய, யாக்கை - உடம்பு, வன்கண் - திண்மையான, வீரம் பொருந்திய, யவனர் - கிரேக்கர்; சோனகர் (Ionians or Greeks), புலித்தொடர் - புலிபொறித்த சங்கிலித்தொடர், விட்ட - தொங்கவிட்ட, புனை - அலங்கரிக்கப்பட்ட, மாண் - பெருமை, நல்இல் - நல்ல இல்லத்தில், திருமணி - அழகிய மணி, விளக்கம் - விளக்கு, காட்டி - ஒளிரச் செய்து,
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்
......................................................திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,                     
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக,  (63 - 66)
கருத்துரை
வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில், (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த ஆரியர் (மிலேச்சியர்)  அருகாமையில் இருப்பர்.
சொற்பொருள் விளக்கம்
          திண்ஞாண் - வலிய கயிறு, எழினி - திரைச்சீலை, வாங்கிய - வளைத்து, ஈரறை - இரண்டு அறைகள், பள்ளியுள் - படுக்கையறையில், உடம்பின் - உடம்பால், உரைக்கும் - தெரிவிக்கும், உரையா - பேசாத, நாவின் - நாவினையுடைய, படம்புகு - சட்டையணிந்த, மிலேச்சர் - ஆரியர், உழையர் - அருகிலுள்ளவர், ஆக - அவ்வாறிருக்க,
மிலேச்சர் - ஆரியர்.
பெலுச்சிதானத்திலிருந்து வந்த துருக்கர்.
பெலுச்சி என்பது மிலேச்சியர் எனத் திரிந்தது.
(முல்லைப்பாட்டு ராய்ச்சியுரை.  பக்கம். 92)
பாசறையில் மன்னனின் மனநிலை
மண்டுஅமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய,                        
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளயும்; தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து,
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்;
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை                                          
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து…... ( 67 - 76)
கருத்துரை
போர் செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால், மன்னன் பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே) படுத்திருந்தான்.  பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற ஆண் யானைகளையும், அடியுண்ட பாம்பு துடிப்பதையும் போன்று, ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும், தேன் ஒழுகும் வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைத்தும், தோலாலான கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரையைப் பற்றி சிந்தித்தும், ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றி மற்றொரு கடகம் அணிந்த கையினால் தலையைத் தாங்கி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான் மன்னன்.
சொற்பொருள் விளக்கம்
          மண்டு - மிக்குச் செல்லும், அமர் - போர், நசையொடு  - விருப்பத்தோடு, கண்படை - உறக்கம், பெறாஅது - கொள்ளாது, எடுத்து - எடுத்து, எறி - எறிந்த, எஃகம் - வேல், பாய்தலின் - பாய்ந்ததால், புண் - புண், கூர்ந்து - மிக்கு, பிடி - பெண்யானை, கணம் - கூட்டம், மறந்த - மறந்திருக்கின்ற, வேழம் - ஆண்யானை, வேழத்து - ஆண் யானையினது, பாம்பு - பாம்பு, பதைப்பு - துடிப்பது, அன்ன - போல, பரூஉக்கை - பருத்த, துதிக்கை, துமிய - அற்று வீழ, தேம்பாய் - தேன்ஒழுகுகின்ற; தேன்சிந்துகின்ற, கண்ணி - மாலை, நல் - நல்ல, வலம் - வெற்றி, திருத்தி - செம்மையாக; மனநிறைவாக, சோறு - செஞ்சோற்றுக்கடன் (தனக்கு உணவளித்தவர்களுக்குச் செய்யும் கடன்), வாய்த்து - தப்பாமற் செய்து, ஒழிந்தோர் - இறந்தோர், உள்ளியும் - நினைத்தும், தோல் - தோல், (தோலானைக் குதிரைக் கவசம்), துமிபு - அறுத்து, வை - கூர்மை, நுனை - முனை, பகழி - அம்பு, மூழ்கலில் - அழுந்தியதால், செவி - காது, சாய்த்து - சாய்த்த, உண்ணாது - உணவினை உண்ணாது, உயங்கும் - வருந்தும், மா - குதிரை, சிந்தித்தும் (வடசொல்) - நினைந்தும், ஒருகை  - ஒரு கை, பள்ளி - படுக்கை, ஒருகை  - மற்றொரு கை, முடியொடு - தலை முடியோடு, கடகம் - கடகம் (கையிலே அணிகின்ற அணிகலன்), சேர்த்தி - சேர்த்து வைத்து, நெடிது - நீள; நீண்ட நேரம்; நெடுநேரம், நினைந்து - நினைந்து,
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல்,
நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி,
அரசுஇருந்த பனிக்கும் முரசுமுழங்கு பாசறை
இன்துயில் வதியுநன்.................... (77 - 80)
கருத்துரை
பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய வலிமையான விரலாலே,ன்னுடைய ஒளியைத் தங்கச் செய்யும் போருக்கு அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியைக் கொடுத்தமையால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்க, வெற்றி முரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்) இனிமையாகத் துயில் கொண்டான் மன்னன்.
சொற்பொருள் விளக்கம்
          பகைவர் - பகைவர், சுட்டிய - குறித்த, படை - படைக்கலம், கொள் - எடுத்த; செலுத்திய, நோன் - வலிய, விரல் - விரல்களையுடைய (கைகளைக் குறிக்கும்), நகை - ஒளி, தாழ் - தாங்கும், கண்ணி - மாலை, நல் - நல்ல, வலம் - வெற்றி, திருத்தி - செம்மையாக; மனநிறைவாக, அரசு - அரசன் (பகையரசன்) இருந்து - இருந்து, பனிக்கும் - நடுங்கும், முரசு - முரசு (வெற்றி முரசு), முழங்கும் - ஒலிக்கும், பாசறை - பாசறை, இன் - இனிய, துயில் - உறக்கம், வதியுநன் - இருப்பவன்; தங்குகின்றவன்,
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
நெஞ்சுஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழைநெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர்அழல                                  
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து,
முடங்குஇறைச் சொரிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின .... .... .... .... (80 - 89)
கருத்துரை
(24ஆம் அடியில் கண்ணீர்த் துளிகள் வீழத் தனிமைத் துயரில் வருந்திய தலைவி, ஈண்டும் தலைவன் வரக்காணாது வருத்தத்தில் இருக்கின்றாள்) தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை நெஞ்சமானது, ‘ஆற்றியிருஎன்று சொல்லிக் கொண்டிருந்த்து. ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது வருத்தத்தில் இருந்தாள். நீண்ட நேரம் சிந்தித்தாள். பின் தன்னைத் தேற்றிக் கொண்டாள்; கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற கழறாமல் அணிந்து கொண்டாள்;  அறிவு மயங்கியும், அவ்றிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும்,  அம்பு தைத்த மயில் போல் நடுங்கினாள். அவளின் அணிகலன்கள் நெகிழ்ந்தன. பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும் ஏழு அடுக்கான அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போலச் சொரிந்தன. அதனால் ஏற்பட்ட இனிய பலவாகிய முழக்கத்தினைக் கேட்டவாறே படுத்துக் கிடக்கின்றாள் தலைவி. அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு ஆரவாரித்தன.
(எவை ஆரவாரித்தன? என்ற கேள்வி படிக்கின்றவர் உள்ளத்தில் எழுமாறு பாடலின் கட்டமைப்பை அமைத்துள்ள ஆசிரியரின் படைப்பாக்கத் திறன் பண்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் இலக்கியம் படைத்தோர் கைக்கொண்ட செய்யுள் அமைப்புத் திறன் அறிந்து வியக்கற்பாலது).
சொற்பொருள் விளக்கம்
காணாள் - காணாதவளாய், துயர் - துன்பம், உழந்து - வருந்தி, நெஞ்சு - நெஞ்சம், ஆற்றுப்படுத்த - வழிப்படுத்த, நிறை - ஒரு காரியத்தைப் பிறர் அறியாமல் செய்தல், தபு - கெடு, புலம்பொடு - தனிமையில், நீடு - நீண்டநேரம், நினைந்து - நினைத்தும், தேற்றியும் - தேற்றிக்கொண்டும், ஓடுவளை - ஓடுகின்ற வளையல், திருத்தியும் - திருத்தமுற அணிந்தும், மையல் - மயக்கம், கொண்டும் - கொண்டும், ஒய்யென - ஒய் என்ற ஒலி, உயிர்த்தும் - பெரு மூச்சு விட்டும், - அம்பு, உறு - தங்கிய; அடைந்த; தைத்த, மஞ்ஞையின்  - மயில் போல், நடுங்கி - நடுங்கி, இழை - அணிகலன், நெகிழ்ந்து - கழன்று, பாவை - கைப்பாவை, விளக்கில் - விளக்கின், பரூஉச்சுடர் - பெரிய சுடர், அழல - எரிய, இடம் - இடம், சிறந்து - சிறந்து, உயரிய - உயர்ந்த, எழுநிலை - ஏழு அடுக்கு, மாடத்து - வீட்டில், முடங்கு - மடங்கிய, இறை - நீர்விழும் கூடல்வாய் (இரு பகுதிகள் பொருந்தும் இடம்), சொரிதரும் - விழுகின்ற, மாத்திரள் - பெரிது திரண்டு, அருவி - நீரோட்டம், இன் - இனிய, பல் - பலவாகிய, இமிழ் - முழங்கும், இசை - ஒலி, ஓர்ப்பனள் - கேட்டவளாய், கிடந்தோள் - படுத்துக் கிடந்தவள், அம்செவி - அழகிய செவி, நிறைய - நிறையுறுமாறு, ஆலின - ஆரவாரித்தன,
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்
……………………………………………………..வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த, ஈண்டுபெருந் தானையொடு               
விசயம், வெல்கொடி உயரி, வலன்ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப .... .... ....(89 - 92)
கருத்துரை
பகைவரை வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத் திரும்புகின்றான் தலைவன்.
சொற்பொருள் விளக்கம்
          வென்று - வெற்றி பெற்று, பிறர் - பகைவர், வேண்டு - விரும்பு, புலம் - இடம், கவர்ந்த - கவர்ந்த; அகப்படுத்த, ஈண்டு - இங்கு, பெருந்தானையொடு - பெரும் படையொடு, விசயம் -வெற்றி, வெல்கொடி - வெற்றிக் கொடி, உயரி - உயர்த்தி, வலன் - வெற்றிக்கு, நேர்பு - ஒத்து,  வயிரும் - ஊது கொம்பும், வளையும்  - சங்கும், ஆர்ப்ப - முழங்க,
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
.................................................அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,                                  
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில், (92 - 100)
கருத்துரை
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த - வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும்.  இத்தகைய முல்லைநிலத்து, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்...............
சொற்பொருள் விளக்கம்
          அயிர - நுண்மணல், செறியிலை - நெருங்கிய இலை, காயா - காயா மலர் (நீல மலர்), அஞ்சனம் (வடசொல்) - மை (போன்ற நீல மலர்), மலர - மலர, முறி - தளிர், இணர் - கொத்து, கொன்றை - கொன்றை மலர், நன்பொன் - நல்ல பொன், கால - சொரிய, கோடல் - காந்தள், குவி - குவிந்த, முகை - மொட்டு, அங்கை - அழகிய கை, அவிழ - மலர, தோடு - பூவின் இதழ், ஆர் - நிறைந்த, தோன்றி - செங்காந்தள், குருதி - உதிரம்  (இரத்தம்), பூப்ப - பூக்க, கானம் - காடு, நந்திய - தழைத்த; செழித்த, செந்நிலம் - செம்மையான நிலம், பெருவழி - பெரிய வழி, வானம் - வானம், வாய்த்த - தப்பாமல் பெய்த, வாங்கு - வளைந்த, கதிர் - கதிர், வரகின் - வரகின், திரி - முறுக்கிய, மருப்பு - கொம்பு, இரலையொடு - கலைமானோடு, மடமான் - பெண்மான், உகள - தாவ, எதிர்செல் - எதிரே செல்லும், வெண் - வெண்நிறமுடைய மேகங்கள், மழை பொழியும் - மழையைப் பொழிகின்ற, திங்களில் - மாதத்தில்,
வந்து கொண்டிருக்கிறது அரசனின் தேர்!
முதிர்காய் வள்ளியம் காடு பிறக்குஒழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101 - 103)
கருத்துரை
போர் வினையை நன்கு ஆற்றிய தலைவன் - முதிர் காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு, பின்னோக்கிச் சென்று மறைய விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான். நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ளக் குதிரையின் குளம்பொலி, (தலைவனின் வரவு பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் செவிகள் நிறையுமாறு ஆரவாரித்தன என்று 89-ஆவது அடியின் பொருளை இணைக்க.)
சொற்பொருள் விளக்கம்
          முதிர் - முதிர்ந்த, காய் - காய், வள்ளியம் காடு (வள்ளி + அம் + காடு) வள்ளிக் கொடி படர்ந்த அழகிய காடு, பிறக்கு - பின்னுக்கு, ஒழிய - தங்க, துனை - விரைவு, பரி - குதிரை, துரக்கும் - செலுத்தும், செலவினர் - பயணித்துக் கொண்டிருப்பவர், வினை - போர்வினை, விளங்கு - திறமை மிகுதியாக விளங்கும்படி, நெடுந்தேர் - நீண்ட தேர், பூண்ட - பூட்டிய, மாவே - குதிரையே.

No comments:

Post a Comment