Wednesday, November 7, 2012

முல்லைப்பாட்டில் உவமைகள்


முல்லைப்பாட்டில் உவமைகள்
பாட்டில் வரும் கருத்துக்களை விளக்குவதற்காக உவமைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அதிலும் அழகைக் காணும்போது இலக்கியம் ஏற்படுத்தும் இன்பம் அளவில்லாதது.  அவ்வகையில் முல்லைப்பாட்டில் பதினோர் உவமைகள் உள்ளன.
1.    நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,                (3)
 மாபலி மன்னன் அந்தணனாக வந்த கண்ணணுக்கு இந்நிலவுலகைத் தாரைவார்த்துக் கொடுத்தபோது, கைகளின் வழியே நீர் ஒழுகி கைகளில் வழியும் நீரோடு திருமால் உயர்ந்து எழுந்த காட்சி போல மழை மேகமும் நீர்த்துளிகளைச் சிதறியவாறு விரைந்து எழுந்து சென்றது என்று மழை மேகத்தைத் திருமாலோடு ஒப்புமைப்படுத்திய உவமை இயற்கையான உவமை.  இன்பம் நல்கும் உவமை.
2.    யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, (8)
 அரும்புகள் மலர்ந்து மணம் வீசும் முல்லை மலரைச் சுற்றி வண்டினம் ஆரவாரம் செய்கிறது.  இதன் ஒலி புலவருக்கு யாழிசை போல் கேட்கிறது.  இசைகேட்டு இன்புற்ற அந்நாளைய இதயங்களுக்கு வண்டினத்தின் ரீங்காரமும் யாழின் இசையாக இருந்தது போலும்.
3.    பூப்போல் உண்கண் புலம்புமுத்து றைப்ப     (23)
 மலர் போன்ற மையுண்ட தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விழுகின்றன.  அந்தக் கண்ணீர் துளிகள் கூட முத்துக்களாய் தெரிகின்றன புலவருக்கு! பாண்டிய நாட்டுத் தலைவியோ?
4     கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
       முக்கோல் அசைநிலை கடுப்ப,       (37 - 38)
பாசறையில் வீர்ர்கள் வில்லை ஊன்றி அதன்மேல் அம்புப்புட்டியைத் தொங்கவிட்டுள்ளனர். பாட்டிலே அதனை வடிக்க நினைத்த புலவருக்கு அதைப் போன்ற மற்றொரு காட்சியும் நினைவுக்கு வந்தது.  துறவிகள் முக்கோலை நட்டு அதன்மேல் தமது காவி உடையைத் தொங்கவிட்டிருப்பது! தான் பார்த்த காட்சியினை அப்படியே உவமையாக்குகின்றார்.  இயல்பான உவமை மட்டுமல்ல, அன்றைய தமிழகத்து துறவிகளை நமக்கு அறிமுகப்படுத்திய உவமையும் கூட!
5  அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
   சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
   துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
   பெருமூ தாளர்…..  (51 - 54)
தலையிலே வெண்துகிலால் தலைப்பாகை கட்டி நடுயாமத்தில் காவல் பணியில் ஈடூபட்டிருக்கின்றனர் காவலர்.  நடுயாமம் தூக்கக் கலக்கம்.  நடையிலே சற்று தடுமாற்றம் காவலரின் தடுமாற்ற நடையைப் பார்த்ததும் பாவலனுக்குக் காற்றுக்கு அசையும் காட்டு மல்லிகைக் கொடி நினைவுக்கு வருகிறது.  உவமை உருவாகிறது.  முல்லைப்பாட்டாசிரியர், கற்பனையான உவமைகளைப் படைக்கவில்லை. தான் கண்டனவற்றையே உவமைப்பொருளாக்கி உள்ளார் என்பது அவரது ஒவ்வோர் உவமையிலிருந்தும் அறிய முடிகிறது.
6. …………………வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய,     (69 - 70)
யானையின் துதிக்கை வெட்டப்பட்டு விழுந்து துடிப்பது அடிப்பட்ட பாம்பு  துடிப்பதைப் போல் இருக்கிறது என்கிறார்.  ஆசிரியர் நப்பூதனார் போர்க்களத்தில் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஒத்த காட்சியை உவமையாக்குகின்றார். நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் அவரின் உவமை உணரக் கூடியதாகவே உள்ளது.
7.  ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி      ,         (84)
தலைவன் வரக்காணாது வருந்தும் தலைவியின் நிலையினை எப்படிச் சொன்னால் உணர்த்த முடியும் என்று சிந்தித்தனர் போலும் புலவர்! மயிலின் உடலில் அம்பு பாய்ந்தால் எவ்வாறு அம்மயில் வலி தாளாமல் நடுங்கித் துன்புறுமோ, அதைப்போன்ற துன்பத்தினைத் தலைவி அடைந்திருந்தாள் என்று பெண்ணின் மிகுதியான துன்பத்தைக் கூறுதற்குக் கையாண்ட உவமை இனிது.
8.    செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,  (93)
செறிந்த இலைகளையுடைய காயா மலர் பூத்திருக்கிறது.  அது நம் புலவரின் கண்ணுக்குப் பெண்கள் கண்ணுக்கு இடும் இடும் மைபோல் காட்சியளிக்கிறது.
9.    முறியிணர்க் கொன்றை நன்பொன் கால,      (94)
பூங்கொத்துகளாகக் காணப்படும் கொன்றை மலர் பொன்னைப் போன்று விளங்குகிறதாம்.
10.  கோடல் குவிமுகை அங்கை அவிழ,           (95)
 வெண் காந்தள் மலரின் குவிந்த மொட்டுகள் அழகிய உள்ளங்கையை விரித்தாற் போன்று மலர்ந்திருக்கிறதாம்.  பண்டைத் தமிழர் இயற்கைக் காட்சிகளில் ஒன்றிணைந்த தன்மையினை அவர்களின் உவமைகளே காட்டி நிற்கின்றன.  ஒத்த உவமைகளை உலவவிடும் புலவரின் திறம் திகைக்க வைக்கிறது.
11    தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,                  (96)
          இதழ் நிறைந்த செங்காந்தள் மலர் இரத்தம் போன்று பூத்து கிடக்கின்றது என்று சொல்லும் உவமை எளியது; அனைவரும் ஒப்பிட்டுப் பார்த்து அறியக் கூடியது.
          இவ்வாறாக முல்லைப்பாட்டில் கூறியுள்ள அத்துணை உவமைப் பொருட்களும் நம்மைச் சுற்றியுள்ள நமது பயன்பாட்டில் இருக்கின்றதாகவே அமைந்துள்ளது.  இனிய எளிய உவமைகளாகவும்,  இன்றளவும் நாம் ஒப்பிட்டுப் பார்த்து உவகை கொள்ளும் உவமைகளாகவும் இருப்பது பெரும் வியப்பை அளிக்கிறது.
          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலகுவான உவமைகளைக் கையாண்டு இலக்கியத்திற்கு ஏற்றமும் எடுப்பும் நல்கியுள்ள நப்பூதனாரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.  பண்டைத் தமிழிலக்கியங்களைப் பொன்னினும் இனிதெனப் போற்றிக் காப்போம்.

No comments:

Post a Comment