புதன், 7 நவம்பர், 2012

குறுந்தொகை-5


நெய்தல் திணை
ஆசிரியர் - நரிவெரூஉத் தலையார்.
பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தை அறிந்து கவலையுற்ற தோழியிடம் தலைவி, தன் கண்கள் துயிலாமையை உணர்த்தி, காமநோய் இத்தன்மையதா? என்று காமநோயின் கொடுமையினைக் கூறியது.

       இக்குறுந்தொகைப் பாடலில், மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகளில் மன உணர்வுகளும் மாறுபடுகின்ற தன்மையினைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
காதலின் தன்மை இதுவென அறியாத வளரிளம் பருவத்துப் பெண். காதலன் பிரிவினால் அவளுடைய கண்கள் தூங்க மறுக்கின்றன. இதுதான் காதலின் தன்மையா என்று வியப்படைகின்றாள் அவள். இங்கே அவளின் உள்ளத்து உணர்வுகள் பாடலாகிறது. இதோ பாடல்...
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
“இனிய நிழலைத் தரும் புன்னை மரம். அதில் வந்து தங்கிய குருகு உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் மீது கடலலைகள் வந்து மோதுகின்றன. மோதும் அலைகளால் வீசப்படும் துளிகளால் புன்னையின் அரும்புகள் மலருகின்றன. இத்தகைய இனிய நீரினையுடைய மென்புலத்துத் தலைவன் என்னைப் பிரிந்தான் என்று பல இதழ்ளையுடைய தாமரை போன்ற என் கண்கள் தூக்கம் இல்லாதாயின. இதுதான் காதல் நோயா? ” என்று தோழியிடம் வினா எழுப்புகின்றாள் தலைவி.
      என்ன அருமை! அந்தப் பெண், தன் துன்பத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். தலைவன் நாட்டு இனிய இயற்கைப் பின்னணியைக் காட்சிப்படுத்துகின்ற விதம், அக்காட்சியில்கூட தலைவனைப் பற்றிய குறிப்பை உள்ளீடாக வைத்துள்ள பாங்கு அனைத்தும் எண்ண எண்ண இன்பம் தருவது.
         தலைவன் நாட்டு புன்னை மரத்தில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் குருகை உறங்க விடாமல் கெடுப்பது அவன் நாட்டு கடலலை. இங்கே தன்னுடைய கண்களையும் உறங்கவிடாமல் கெடுப்பது தலைவனின் நினைவலைகள் என்று மறைபொருளாக மற்றொன்றையும் உணர்த்துகின்றாள் தலைவி.
காதலின் வலியோடு கடலும் மரமும் குருகும் கைகோர்க்கும் இனிய இயற்கைப் பின்னணியைப் பாடலில் வடித்துக் காட்டிய தமிழ்ப் புலவர்களின் திறம்தான் என்னே?


சொற்பொருள் விளக்கம்
அதுகொல் தோழி- அத்தன்மையதா தோழி, காமநோய்-காமநோய், வதி குருகு – தங்கும் குருகு, உறங்கும் – உறங்குகின்ற, இன்நிழல் புன்னை – இனிய நிழலைத் தரும் புன்னை மரம், உடைதிரை திவலை – உடைகின்ற அலைவீசும் துளி, அரும்பும் – மலரும், தீம்நீர்- இனிய நீர், மெல்லம் புலம்பன் – நெய்தல்நிலத் தலைவன், பிரிந்தென - பிரிந்தான் என்று, பல் இதழ் – பல இதழ்களையுடைய, உண்கண் – மையுண்ட கண்கள்,  பாடு – தூக்கம், ஒல்லாவே – பொருந்தாதாயினவே.


1 கருத்து: