திங்கள், 5 நவம்பர், 2012

குறுந்தொகை-1


திப்புத் தோளார்.

குறிஞ்சித்திணை

தோழி கூற்று
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே
                         
கருத்துரை                                -
போர்க்களம் செந்நிறமாகுமாறு அவுணர்களைக் கொன்று அழித்தவன்; இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினைக் கொண்டவன்; சிவந்த தந்தங்களையுடைய யானையையும் உடையவன்;  கழலுகின்ற தொடி அணிந்தவன்; சிவந்த நிறமுடையவன்(குறிஞ்சி நில முருகன்). அவனின்  இக்குன்றம், இரத்த நிறத்தில் குலை குலையாகப் பூத்திருக்கும்  காந்தளை மிகுதியாகக் கொண்டிருக்கின்றது.
அருஞ்சொற்பொருள்
செங்களம்- (போர்) களம் செம்மையாக, பட -தோன்ற, கொன்ற- அழித்த, அவுணர் தேய்த்த- அவுணர் இல்லையாகும்படி செய்த, செங்கோல் அம்பின்-சிவந்த நீண்ட அம்பினையும், செங்கோட்டி யானை- சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழல்தொடி- கழன்று விழுகின்ற தோள்வளை,சேஎய் - சிவந்த நிறமுடையவன்(குறிஞ்சிநில முருகன்),குன்றம் - குன்றம், குருதிப் பூவின்- இரத்த நிறமுள்ள பூவின், குலை- கொத்து, காந்தட்டு ஏ- காந்தளை உடையது.

குறுந்தொகையின் வாழ்த்துப்பாடல் செவ்வேளைக் குறித்து அமைய, அதன் முதற்பாடலும் சேயோன், தீயவர்களை அழித்து நல்லவர்களுக்கு உதவிய, வீரமும் ஈரமும் ஒருங்கு அமைந்த பாடலாகவே அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக